/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண் சாலை தானே கேட்கிறோம் பெசன்ட் நகர் மீனவர்கள் குமுறல்
/
மண் சாலை தானே கேட்கிறோம் பெசன்ட் நகர் மீனவர்கள் குமுறல்
மண் சாலை தானே கேட்கிறோம் பெசன்ட் நகர் மீனவர்கள் குமுறல்
மண் சாலை தானே கேட்கிறோம் பெசன்ட் நகர் மீனவர்கள் குமுறல்
ADDED : அக் 27, 2025 03:03 AM

பெசன்ட் நகர்: பெசன்ட் நகர், ஊரூர் குப்பத்தில், மிகவும் சேதமடைந்துள்ள மண் சாலையை சீரமைத்து தர வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அடையாறு மண்டலம், 174வது வார்டு, பெசன்ட் நகர், ஊரூர் குப்பம் பகுதியில், 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடற்கரை அருகில் இந்த வீடுகள் உள்ளதால், மாநகராட்சியால் தார், சிமென்ட் சாலை அமைக்க முடியவில்லை.
இதனால், பல ஆண்டு களாக மண் சாலையாக உள்ளது. அதை கூட சரி செய்து தரவில்லை எனவும், கவுன்சிலர், அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:
எங்கள் வாழ்வாதாரம் கடலை நம்பித்தான் உள்ளது. இதனால், கடல் அருகில் பல தலைமுறைகளாக வசிக்கிறோம். கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டால், தார் சாலை அமைத்து தர முடியாது என, மாநகராட்சி கைவிரித்துவிட்டது.
இருக்கும் மண் சாலையையாவது சரி செய்து தாருங்கள் என, பல ஆண்டுகளாக கேட்கிறோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாங்களே மண், கற்களை கொட்டி சரி செய்து பயன்படுத்தி வருகிறோம்.
அடையாறு ஆற்று முகத்துவார பகுதி மேம்பாட்டு பணிகளை பார்வையிட, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வேறு வழியாக சென்றாலும், அவர்களை வரவேற்க அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., கவுன்சிலர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இதே சாலை வழியாகத் தான் செல்கின்றனர்.
அவர்களிடமும் முறையிட்டுவிட்டோம். எதுவும் நடக்கவில்லை. நாங்கள் கேட்பது தார் சாலையோ, சிமென்ட் சாலையோ அல்ல. இருக்கும் மண் சாலையை, சரி செய்து தாருங்கள் என்று தான் கேட்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ''மழையால் சாலை மிக மோசமாக இருப்பது உண்மை தான். உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.

