/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
18ம் நுாற்றாண்டு கட்டடத்திற்கு சார் - பதிவு அலுவலகம் வருமா? சீரமைத்தும் இரு ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் அவலம்
/
18ம் நுாற்றாண்டு கட்டடத்திற்கு சார் - பதிவு அலுவலகம் வருமா? சீரமைத்தும் இரு ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் அவலம்
18ம் நுாற்றாண்டு கட்டடத்திற்கு சார் - பதிவு அலுவலகம் வருமா? சீரமைத்தும் இரு ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் அவலம்
18ம் நுாற்றாண்டு கட்டடத்திற்கு சார் - பதிவு அலுவலகம் வருமா? சீரமைத்தும் இரு ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் அவலம்
ADDED : பிப் 05, 2024 01:10 AM

பிராட்வே:கடந்த 18ம் நுாற்றாண்டில், 'இந்தோ சராசெனிக்' கட்டடக் கலையில் கட்டப்பட்ட கட்டடத்தில், புனரமைப்பு பணிகள் முடிந்து 2 ஆண்டுகளாகியும், அங்கு இயங்கிய சார் - பதிவாளர் அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளது.
இதனால், இதன் வளாகத்தில் வெளியாட்கள் புகுந்து போதை பொருட்கள் வினியோகம், மதுக்கூடமாக பயன்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
பிராட்வே, ராஜாஜி சாலையில் 1864ல் ராபர்ட் பெலோஸ் சிஷோல்ம் என்ற பிரிட்டீஷ்காரரால், 'இந்தோ சராசெனிக்' கட்டடக் கலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் 24,880 சதுரடியில் வடிவமைக்கப்பட்டது.
காலப்போக்கில், அரசு அலுவலகங்கள் செயல்பட துவங்கின. ராயபுரம் சார் - பதிவாளர் அலுவலகம், வடசென்னை இணை - 1 சார் - பதிவாளர் அலுவலகம், உதவி பதிவு துறை தலைவர் அலுவலகம், பதிவு துறை துணை தலைவர் அலுவலகம், சிட்டி நடுவர் நீதிமன்றம் மற்றும் புதிதாக பணியில் சேரும் சார் - பதிவாளர்களான பயிற்சி மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தன.
அரசுக்கு பரிந்துரை
கடந்த 2015ல் சென்னையில் வெளுத்து வாங்கிய மழையும், வெள்ளப்பெருக்கும் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டடங்களில், இந்த கட்டடமும் ஒன்று.
அப்போது வெள்ளத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வளாகத்தில் நின்ற பழமை வாய்ந்த பெரிய மரம் வேரோடு சாய்ந்து கட்டடத்தின் மேற்கூரை மீது விழுந்ததில், கட்டடம் சேதமடைந்தது. இதில் கட்டடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன.
இதையடுத்து 2016 ஜனவரியில், பாதுகாப்பு காரணமாக இங்கிருந்த அனைத்து அரசு அலுவலகங்களும் இடம் மாற்றம் செய்யப்பட்டன. கட்டடம் பாழதடைந்தால் மூடப்பட்டது.
இந்த நிலையில், தொன்மை வாய்ந்த புராதன கட்டடம் என்பதால், இந்த கட்டடத்தை தொன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என, அரசுக்கு தொல்லியல் துறையினர் பரிந்துரைத்தனர்.
இதையடுத்து, 9.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுப் பணித்துறையின் கட்டட மையம் மற்றும் பாதுகாப்பு கோட்டம், இந்த கட்டடத்தை 2020ல் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டது.
'மெட்ராஸ் டெரஸ் ரூப், மங்களூரு டைல்ஸ் ரூப்' கூடிய செங்கல் கூரை பகுதி, சுண்ணாம்பு பூச்சு மற்றும் தேக்குமரம் உத்தரம், கதவுகள், செங்கல் துாண்களாலான இக்கட்டத்தில் பாரம்பரிய முறையில் பூச்சு வேலை செய்து புனரமைக்கப்பட்டது.
உயர் கோபுரம், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தேக்கு மரத்திலான படிக்கட்டுகள், தரை மற்றும் முதல் தளத்தில் 32 தேக்கு மர கதவுகள், 80 தேக்கு மர ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செங்கல் மற்றும் சுண்ணாம்பு பூச்சின் சிறப்புத்தன்மை காரணமாக, கோடை காலத்திலும் இந்த கட்டடம் குளிர்ச்சியாகவே இருக்கும்.
ஆனால், பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழிந்தும், கட்டடம் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
இது குறித்து பத்திர பதிவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தில் போதிய கழிப்பறைகள் இல்லை. கழிப்பறைகள் கட்ட வேண்டி உள்ளதால், கட்டடம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது' என்றனர்.
மதுக்கூடமாக மாறும் அவலம்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'புனரமைக்கப்பட்ட கட்டடம், இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளதால், 'குடி' மகன்கள் மதுக்கூடமாக மாற்றி உள்ளனர்.
'மேலும், இப்பகுதியில் கடை வைத்துள்ளோரும் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். வெளியாட்கள் அத்துமீறலை தவிர்க்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
வாடகை கட்டடத்தில் சார் -பதிவாளர் அலுவலகம்
பிராட்வே, ராஜாஜி சாலையில் இருந்து மாற்றப்பட்ட ராயபுரம் சார் - பதிவாளர் அலுவலகம், வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள வாடகை கட்டடத்தில், மாதம் 65,000 ரூபாய் வாடகையில் செயல்பட்டு வருகிறது. இங்கு பத்திரப்பதிவுக்காக தினமும் 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இங்கு குடிநீர், கழிப்பறை, போதிய நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை. இதனால் பத்திரப்பதிவிற்கு காத்திருக்கும் மக்கள், பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
முதல் மாடியில் அலுவலகம் உள்ளதால், மாற்றுத்திறனாளிகள், முதியோரை நாற்காலிகளில் அமர வைத்து, மேலே இருவர் துாக்கி செல்லும் அவல நிலையே உள்ளது.
எனவே, புனரமைக்கப்பட்டு இரு ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள ராஜாஜி சாலை சார் - பதிவாளர் அலுவலகத்தை உடனே திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- சந்துரு, சமூக ஆர்வலர்

