/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடை திட்டம் 52 தெருக்களில் 'மிஸ்ஸிங்'
/
பாதாள சாக்கடை திட்டம் 52 தெருக்களில் 'மிஸ்ஸிங்'
ADDED : மார் 02, 2024 12:24 AM
புழுதிவாக்கம், பெருங்குடி மண்டலம், வார்டு 185, 186க்கு உட்பட்டது உள்ளகரம் மற்றும் புழுதிவாக்கம். இங்கு, 2019ல், பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் முடிந்து, 600க்கும் மேற்பட்ட தெருக்களில் பயன்பாட்டுக்கு வந்தது.
பாதாள சாக்கடை பணியில், இரண்டு வார்டுகளிலும், அன்னை தெரசா நகர், சிவபிரகாசம் நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில், 52 தெருக்கள் விடுபட்டு போயின. இதனால், வீடுகளில் இருந்து கழிவுநீர் ஏற்ற வழியின்றி மக்கள் சிரமப்படுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோபிநாத், 74, கூறியதாவது:
விடுபட்ட 52 தெருக்களிலும், பாதாள சாக்கடைத் திட்டம் துவங்க வலியுறுத்தி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளிட்டோரிடம் பல முறை புகார் மனு அளிக்கப்பட்டது.
கடந்த 2022, ஏப்ரலில், அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரும் பணி துவங்கவில்லை. விடுபட்ட தெருக்களில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை துவங்க கோரி, 40 பக்க அறிக்கையை, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைத்தும் உரிய பதில் இல்லை.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, விடுபட்ட தெருக்களில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து துவங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

