/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவல் எல்லை பிரச்சனையால் அவதிப்படும் மக்கள்
/
காவல் எல்லை பிரச்சனையால் அவதிப்படும் மக்கள்
ADDED : பிப் 07, 2024 12:17 AM
விபத்தில் சிக்கினாலோ, பொருட்கள் பறிபோனோலோ சம்பவம் நடந்த பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையம் தெரியாமல் மக்கள் அல்லல்படுவதை தடுக்க ஆங்காங்கே காவல் உதவி எண்கள் கொண்ட பதாகைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், 12 காவல் மாவட்டங்களும், 104 காவல் நிலையங்களும் உள்ளன.
ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதனால், சாலை விபத்து, பணம், நகை திருட்டு மற்றும் பறிப்பு சம்பவங்களில் பாதிக்கப்படுவோர் சம்பவம் நடந்த இடம் எந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பது தெரியாமல் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனர்.
அப்படியே மொபைல்போன் பறிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு சென்றால், சம்பவம் நடந்த இடம் தங்கள் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடம் கிடையாது நீங்கள் வேறு ஒரு காவல் நிலையம் பெயரை கூறி அங்கே செல்லுங்கள் என, கூறி திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.
இதுகுறித்து தி.நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது :
பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் ஒருவர், இப்பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணும் விதமாக, 2021ம் ஆண்டு ஒரு நடைமுறையை கொண்டுவந்தார்.
அதாவது, பாண்டிபஜார் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் சுவர்களில் அவருடைய தொடர்பு எண்ணை பெயின்ட் பயன்படுத்தி பதிவு செய்தார். அவரது இந்த நடவடிக்கை பாதிக்கப்படுவோருக்கு மிகுந்த உதவியாக இருந்தது.
ஆனால், அவரை போன்று மற்ற யாரும் தங்களது மொபைல் போன் எண்ணை பதிவு செய்யவில்லை.
தற்போது மாநகராட்சி ஆங்காங்கே நடைபாதை புகார் அளிக்க இலவச புகார் எண் கொண்ட பதாகைகள் அமைத்து உள்ளதை போல, ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியிலும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய எண் கொண்ட பதாகைகள் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர்-

