/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பரந்தூர் ஏர்போர்டிற்கு 2ம் கட்ட நிலம் எடுப்பு அறிவிப்பு! 259 பேரிடம் 43 ஏக்கர் கையகப்படுத்த மும்முரம்
/
பரந்தூர் ஏர்போர்டிற்கு 2ம் கட்ட நிலம் எடுப்பு அறிவிப்பு! 259 பேரிடம் 43 ஏக்கர் கையகப்படுத்த மும்முரம்
பரந்தூர் ஏர்போர்டிற்கு 2ம் கட்ட நிலம் எடுப்பு அறிவிப்பு! 259 பேரிடம் 43 ஏக்கர் கையகப்படுத்த மும்முரம்
பரந்தூர் ஏர்போர்டிற்கு 2ம் கட்ட நிலம் எடுப்பு அறிவிப்பு! 259 பேரிடம் 43 ஏக்கர் கையகப்படுத்த மும்முரம்
ADDED : மார் 13, 2024 12:17 AM

சென்னை, :காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், சென்னை இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணியில், தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அத்திட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலிலும், நிலம் கையகப்படுத்தும் பணியை, அரசு முடுக்கிவிட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில், பயணியரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. வர்த்தகம், தொழில், சுற்றுலா போன்ற துறைகளில், தமிழகம் மேலும் வளர்ச்சி அடையவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அதிக பயணியர் மற்றும் சரக்குகளை கையாளும் திறனில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இப்புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் முகமையாக, 'டிட்கோ' எனப்படும், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் செயல்படுகிறது.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில், புதிய விமான நிலையம் அமைக்க, காஞ்சிபுரம், பரந்துாரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அங்கு, அடுத்த 35 ஆண்டுகளுக்கு விமான போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், ஆண்டுக்கு 10 கோடி பயணியரை கையாளும் வகையிலும், பரந்துார் மற்றும் அதை சுற்றிய கிராமங்களில் 5,400 ஏக்கரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
விமான நிலையம் அமைக்க விரிவான தொழில்நுட்பம் மற்றும் செலவு குறித்த ஆய்வை, ஒப்பந்த நிறுவனம் வாயிலாக டிட்கோ முடித்தது. அந்த அறிக்கையை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்து, அனுமதி கேட்டுள்ளது.
பரந்துார் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்பான முதல் அறிவிப்பு, கடந்த மாதம் 24ல் வெளியானது. அதன்படி முதலாவதாக, பொடவூர் கிராமத்தில், 218 நபரிடம் இருந்து 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு, இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாக உள்ளது. இருப்பினும், இரண்டாம் கட்டமாக, சிறுவல்லுார் கிராமத்தில், 259 பேரிடம் இருந்து, 43 ஏக்கர் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கையகப்படுத்த வேண்டிய, 3,750 ஏக்கரும், மூன்று மண்டலங்களாக பிரித்து நிலம் வாங்கப்படும். ஒவ்வொரு முறையும், 200 ஏக்கர் - 300 ஏக்கர் என, நிலம் வாங்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
சந்தை மதிப்பில் 1 ஏக்கர் நிலம் 15 லட்சம் ரூபாயாக உள்ளது. ஆனால், அரசு அறிவித்தபடி, அதற்கு கூடுதலாக இரண்டரை மடங்கு இழப்பீடு வழங்கப்படும். ஆறு மாதங்களில் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

