/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறு, கூவம் கரைகளில் புதிய சாலைகள் நிதித்துறை செயலர் தலைமையில் ஆலோசனை
/
அடையாறு, கூவம் கரைகளில் புதிய சாலைகள் நிதித்துறை செயலர் தலைமையில் ஆலோசனை
அடையாறு, கூவம் கரைகளில் புதிய சாலைகள் நிதித்துறை செயலர் தலைமையில் ஆலோசனை
அடையாறு, கூவம் கரைகளில் புதிய சாலைகள் நிதித்துறை செயலர் தலைமையில் ஆலோசனை
ADDED : டிச 24, 2025 05:10 AM
சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அடையாறு, கூவம் கரையோரங்களில் புதிதாக சாலைகள் அமைக்க, ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமான 'கும்டா' பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக, நிதித்துறை செயலர் தலைமையில் நடந்த கூட்டத்தில், நெடுஞ்சாலை ஆணையத்திற்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
சென்னையில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. பலகட்ட நடவடிக்கைகள் எடுத்தாலும், நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான மாற்று திட்டங்கள் குறித்து, நிதித்துறை செயலர் உதயசந்திரன் தலைமையில், முதல்வரின் செயலர், நெடுஞ்சாலை துறை, தமிழக நெடுஞ்சாலைகள் ஆணையம், கும்டா, சி.எம்.டி.ஏ., மற்றும் நில நிர்வாகத்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த கூட்டத்தில், சென்ட்ரல் ரயில் நிலையம் - கோயம்பேடு இடையே, பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஆறு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய, 'கும்டா' பரிந்துரைத்துள்ளது. இந்த வழித்தடத்தில், துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை அமைய உள்ளதால், போக்குவரத்து நெரிசல் குறைகிறதா என்று பார்த்து, அதன்பின் முடிவு எடுக்கலாம் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, அடையாறு கரையோரம், சென்னை விமான நிலையத்தின் பின்புறம் துவங்கி வரதராஜபுரம் வரை, வெளிவட்ட சாலையை இணைக்கும் வகையில் சாலை அமைக்க முடிவானது.
மேலும், ராமபுரம் முதல் ஈக்காட்டுத்தாங்கல் வரை, அடையாற்று கரையோரத்தில் சாலை; சின்னமலை முதல் அடையாறு திரு.வி.க., பாலம் வரை சாலை; கோயம்பேடு முதல் வெளிவட்ட சாலை வரை, கூவம் கரையோரத்திலும் சாலை அமைக்க, கும்டா அதிகாரிகள் பரிந்துரைத்தனர். இதில், முதல்கட்ட பணிகளுக்கான திட்டங்களை தயாரிக்க, நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிடப்பட்டது.
ஒரகடம் -செய்யார் இடையே தொழில் வழித்தடம் அமைக்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த சாலையை, 164 அடி அகலத்தில் அமைக்கும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழக நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
விரைவான வாகன பயணத்தை உறுதி செய்வதற்கான மாற்றங்களை பரிந்துரைக்கவும், நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.
மத்திய அரசின் நகர்ப்புற போக்குவரத்து நெரிசல் குறைப்பு கொள்கை அடிப்படையில், திருவண்ணாமலை, கோவை சிங்காநல்லுார் புறவழிசாலை ஆகிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

