/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட் - பல்லாவரம் இடையே ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கம் துவக்கம்
/
ஏர்போர்ட் - பல்லாவரம் இடையே ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கம் துவக்கம்
ஏர்போர்ட் - பல்லாவரம் இடையே ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கம் துவக்கம்
ஏர்போர்ட் - பல்லாவரம் இடையே ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கம் துவக்கம்
ADDED : பிப் 28, 2024 12:43 AM

பல்லாவரம், பாதுகாப்பு துறை அனுமதி வழங்கியதை தொடர்ந்து, ஏர்போர்ட் - பல்லாவரம் இடையே, ஜி.எஸ்.டி., சாலையை மூன்று வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி துவங்கியுள்ளது. இரு மாதங்களில் இப்பணி முடியும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிண்டி முதல் செங்கல்பட்டு வரையிலான, ஜி.எஸ்.டி., சாலை அதிக போக்குவரத்து கொண்டது. தென் மாவட்டங்களை சென்னையுடன் இணைப்பதில், முக்கிய பங்கு வகிப்பதால், தினசரி நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இச்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தாலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் மார்க்கமாகச் செல்லும் இடத்தில், 1,300 அடி துாரத்திற்கு சாலை குறுகலாகவே உள்ளது. இதனால், குறிப்பிட்ட அந்த இடத்தில் நாள்தோறும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
'பீக் ஹவர்' நேரத்தில் அந்த இடத்தை கடக்க, 40 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. மற்றொருபுறம், வெள்ளிக்கிழமை தோறும், பல்லாவரம் சந்தை நடக்கும் போது, இந்த நெரிசல் இன்னும் அதிகரித்து, வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது.
குறிப்பிட்ட அந்த இடத்தில் சாலையை விரிவாக்கம் செய்தால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, கோரிக்கை வலுத்தது.
ஆனால், அந்த இடம் பாதுகாப்பு துறை, விமானப் படை மற்றும் கண்டோன்மென்ட் நிர்வாகங்களுக்கு சொந்தமானது என்பதால், அத்துறைகளிடம் இருந்து அனுமதி பெற, ஐந்து ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்டது.
கடந்த 2023 மே மாதம், 1,300 அடி துாரத்திற்கு, 10.3 அடி அகலத்திற்கு இடத்தை வழங்க, பாதுகாப்பு துறை அனுமதி வழங்கியது.
அதற்கு பதில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாதுகாப்பு, விமானப்படை, கண்டோன்மென்ட் நிர்வாகங்களுக்கு, 14 கோடி ரூபாய் செலவில் கட்டடம் கட்டித் தர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதற்கு, மாநில அரசு ஒப்புதல் வழங்கி, கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, சாலை விரிவாக்கம் செய்யும் பணி துவங்கியுள்ளது.
இதற்காக, 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. கண்டோன்மென்ட் சுற்றுச்சுவரை இடித்து விட்டு, புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணி முடிக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக, பாதுகாப்பு மற்றும் விமானப் படை இடங்களில் உள்ள பழைய சுற்றுச்சுவரை இடிக்க, அதன் அருகே புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.
நிலம் கையகப்படுத்தும் பணி, மார்ச் இறுதிக்குள் முடிந்து விடும். அதன் பின், சாலை அமைக்கும் பணி ஏப்ரல் மாதத்தில் முடிக்கப்படும்.
இரண்டு மாதங்களில், ஏர்போர்ட் - பல்லாவரம் இடையேயான ஜி.எஸ்.டி., சாலை மூன்று வழிப்பாதையாக மாற்றப்பட்டு, பல ஆண்டுகளாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிட்டும் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

