ADDED : மார் 02, 2024 12:34 AM

பூந்தமல்லி, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது, பாணவேடு தோட்டம். இங்கு, அருந்ததியர் காலனி, பாணவேடு தோட்டம், பிடாரி தாங்கல் மற்றும் பிடாரி தாங்கல் காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. 5,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
கடந்த 2014 -- 15ல் சமுதாய திட்டத்தின் கீழ், 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 48 சென்ட் நிலத்தில், சாலை, கை பம்ப் மயான மேடை வசதியுடன், சமுதாய மயானம் அமைக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள், மயானத்தை சுற்றி குப்பை கொட்டி வருகின்றனர். இதனால், சமுதாய சுடுகாடு குப்பை மேடாக காட்சி அளிக்கிறது.
அதேபோல, ஊராட்சி நிர்வாகமும் அப்பகுதி அருகில், குப்பைக் கழிவுகளை தேக்கி வைத்து, தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால், இறுதிச் சடங்கு மற்றும் உடல்களை தகனம் செய்ய வருவோர், கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், சமுதாய மயானத்தை மீட்டு சுற்றுச்சுவர் அமைத்து, அங்குள்ள குப்பைக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

