/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'அம்மா' உணவகத்தில் தி.மு.க., ஆதிக்கம்: வளசை மண்டல அலுவலகம் முற்றுகை
/
'அம்மா' உணவகத்தில் தி.மு.க., ஆதிக்கம்: வளசை மண்டல அலுவலகம் முற்றுகை
'அம்மா' உணவகத்தில் தி.மு.க., ஆதிக்கம்: வளசை மண்டல அலுவலகம் முற்றுகை
'அம்மா' உணவகத்தில் தி.மு.க., ஆதிக்கம்: வளசை மண்டல அலுவலகம் முற்றுகை
ADDED : டிச 11, 2024 12:15 AM

வளசரவாக்கம், வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரம் 155வது வார்டு, பஜனை கோவில் தெரு, பாரதி சாலை மற்றும் திருமலை நகர் ஆகிய மூன்று இடங்களில், 'அம்மா' உணவகம் இயங்கி வருகிறது.
இந்த உணவகங்களில், அ.தி.மு.க., - தி.மு.க.,வைச் சேர்ந்த பெண்கள் பணிபுரிகின்றனர். இருதரப்பு இடையே, அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
இதனால், பஜனை கோவில் தெருவில் உள்ள 'அம்மா' உணவகத்தின் நான்கு ஊழியர்கள், பாரதி சாலை அம்மா உணவகத்திற்கு, இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இவர்களை பணியில் சேர்த்து கொள்ள, பாரதி சாலை அம்மா உணவகத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், தி.மு.க., பெண் ஊழியர்கள் அ.தி.மு.க., பெண் ஊழியரை தாக்கியுள்ளனர்.
இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து, சென்னை மாநகராட்சி அம்மா உணவக டி.ஆர்.ஓ., சோபியா மற்றும் மண்டல அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.
இதில், உடன்பாடு ஏற்படாததால், 30க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., அம்மா உணவக பெண் ஊழியர்கள், நேற்று மாலை வளசரவாக்கம் மண்டல அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா செய்தனர். அப்போது, மூன்று பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் நடவடிக்கை என்ன?
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 'அம்மா' உணவக ஊழியர்கள் கூறியதாவது:
அரசியல் உள்நோக்கத்துடன், அம்மா உணவகத்தில் தொடர்ந்து பிரச்னை செய்து வருகின்றனர். அம்மா உணவகத்திற்கு கட்சியினர் செல்ல கூடாது என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அவர்கள் முதல்வரையும் கட்சி கொள்கைகளையும் மதிக்கவில்லை. ஆலோசனை கூட்டம் நடத்திய அம்மா உணவக டி.ஆர்.ஓ., கூட்டத்திற்கு வந்த அனைவரையும் புகைப்படம் எடுத்து, அடுத்து நான் வரும்போது இவர்கள் பணியில் இருக்கக்கூடாது என, மிரட்டுகிறார்.
எங்கள் ஊழியரை தாக்கிய தி.மு.க.,வை சேர்ந்த இரு பெண்களும், ராமாபுரம் அம்மா உணவகத்தில் திரும்பவும் பணிக்கு வரக்கூடாது.
இவ்வாறு கூறினர்.

