sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வேளச்சேரியில் இடமிருந்தும் பஸ் நிலையம் அமைப்பதில்... அலட்சியம்: எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீது தொகுதிமக்கள் அதிருப்தி

/

வேளச்சேரியில் இடமிருந்தும் பஸ் நிலையம் அமைப்பதில்... அலட்சியம்: எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீது தொகுதிமக்கள் அதிருப்தி

வேளச்சேரியில் இடமிருந்தும் பஸ் நிலையம் அமைப்பதில்... அலட்சியம்: எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீது தொகுதிமக்கள் அதிருப்தி

வேளச்சேரியில் இடமிருந்தும் பஸ் நிலையம் அமைப்பதில்... அலட்சியம்: எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீது தொகுதிமக்கள் அதிருப்தி

1


ADDED : ஆக 04, 2025 03:05 AM

Google News

ADDED : ஆக 04, 2025 03:05 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையில் வேளச்சேரி அபார வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அரசு இடம் ஒதுக்கி, 10 ஆண்டுகளாகியும் இன்னும் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படாததால், தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டு எழுந்துள்ளதோடு, சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையிலாவது, பேருந்து நிலையத்திற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என, தொகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தென்சென்னையில், வேளச்சேரி அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கேற்ப, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல, தரமணி - தாம்பரம், வேளச்சேரி - தாம்பரம், சின்னமலை - தாம்பரம் மற்றும் வேளச்சேரி - ஆலந்துார் 100 அடி அகல ரயில்வே உள்வட்ட சாலை, வேளச்சேரி - தரமணி 80 அடி ரயில்வே சாலை என, வேளச்சேரியைச் சுற்றி, பிரதான சாலைகள் பல உள்ளன.

மேலும், வேளச்சேரி மேம்பால ரயில் நிலையம் - பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டு, ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட உள்ளது.

குறுகிய இடம் பொது போக்குவரத்திற்காக இவ்வளவு கட்டமைப்புகள் இருந்தும், வேளச்சேரியில் முறையான பேருந்து நிலையம் அமைக்கவில்லை.

தற்போதுள்ள விஜயநகர் சந்திப்பில், சாலையோரம் குறுகிய இடத்தில் செயல்படும் பேருந்து நிலையத்தில், ஒரே நேரத்தில் நான்கு பேருந்துகளை மட்டுமே வரிசையாக நிறுத்த முடியும்.

ஆனால், இங்கிருந்து, அம்பத்துார், தாம்பரம், பாரிமுனை, கேளம்பாக்கம் பகுதிகளுக்கு, 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வீதம் இயக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வேளச்சேரி வழியாக, இரு நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வீதம் நின்று செல்கிறது.

இந்நிலையில், பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதாகக்கூறி, சாலையை ஆக்கிரமித்து பணி நடக்கிறது. இதனால், ஏற்கனவே நிலவி வரும் போக்குவரத்து நெரிசல், இப்பணியால் மேலும் அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகள், அவ்வழியை கடக்க, தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதற்கு தீர்வாக, வேளச்சேரி ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள அரசு நிலத்தில் வேளச்சேரி பேருந்து நிலையத்தை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

வேளச்சேரி ரயில் நிலையம் அமைக்க, 1999ம் ஆண்டு, 60,000 சதுர மீட்டர் இடத்தை, தமிழக அரசு ஒதுக்கியது. ரயில் நிலையம், பணிமனை, தண்டவாளம் போக, 22 ஏக்கர் இடம் காலியாக உள்ளது.

அதில், பிரதான நுழைவு வாயிலான ரயில் நிலையத்தின் வடக்கு திசையில், 12 ஏக்கர் இடம் காலியாக உள்ளது. அதேபோல், தெற்கு திசையில் ரயில் நிலையத்திற்கு ஒதுக்கிய இடத்தை ஒட்டி, 15 ஆண்டு களுக்கு முன், புறநகர் பேருந்து நிலையம் கட்ட ஒதுக்கிய 6.24 ஏக்கர் இடம் அப்படியே உள்ளது.

ரயில் நிலையத்திற்கு, வடக்கு திசையில் இருந்து தான், 95 சதவீத பயணியர் செல்கின்றனர். இங்கு தான் முக்கிய பிரதான சாலைகள் உள்ளன.

அதனால், வடக்கு திசையில் வேளச்சேரி பேருந்து நிலையம் அமைக்க, 2 ஏக்கர் இடத்தை ஒதுக்கி, அதற்கு ஈடாக, 6.24 ஏக்கர் இடத்தில் இருந்து 2 ஏக்கர் இடத்தை ரயில்வேக்கு வழங்கினால், புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியும்.

அதற்கான நடவடிக் கையில், தொகுதி எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் இறங்காததால், பேருந்து நிலையம் அமைப்பதற்கான கோரிக்கை பல ஆண்டுகளாக முடங்கி உள்ளது.

போக்குவரத்து துறை, மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கண்டுகொள்ளாததால், வேளச்சேரி ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் உள்ள காலி இடத்தில், 1.5 ஏக்கர் இடத்தை, 'புட்கோர்ட்' அமைக்க, ரயில்வே நிர்வாகம், 2023ல் தனியாருக்கு வழங்கியது.

முயற்சி தேவை இந்நிலையில், இந்த இடத்தை ஒட்டியுள்ள 1 ஏக்கர் இடத்தை, விளையாட்டு மையம் அமைக்க, தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதில், டேபிள் டென்னிஸ், பூப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, கபடி, கேரம், செஸ், வாலிபால் உட்பட ஏராளமான விளையாட்டுகளுக்கு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

அதற்கு பதிலாக, இந்த விளையாட்டு அரங்கங்களை தெற்கு திசையில் அமைத்து, வடக்கு பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க, தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என, வேளச்சேரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு முன்வரணும் மந்தைவெளி, திருவான்மியூர், வடபழனி உள்ளிட்ட பேருந்து நிலையங்கள், பல கோடி ரூபாயில் மேம்படுத்தப் படுகின்றன. அபார வளர்ச்சி அடைந்த வேளச்சேரியை யாரும் கண்டுகொள்ளவில்லை. வேளச்சேரி வளர்ச்சிக்காக, எம்.பி., - எம்.எல்.ஏ.,விடம் பலமுறை கடிதம் கொடுத்து, அந்தந்த துறைகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம். சட்டசபை தேர்தல் வருவதற்குள், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - குமாரராஜா, 66, தலைவர், அன்னை இந்திராநகர் குடியிருப்போர் நலச்சங்கம், வேளச்சேரி

பொது நலனுக்கு வழங்கலாம்


சர்தார் பட்டேல் சாலையில், சி.எல்.ஆர்.ஐ., மற்றும் ஐ.ஐ.டி., கல்வி நிலையம் உள்ளன. இந்த இடம், தமிழக அரசு ஒதுக்கியது. சாலை உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்கு தேவைப்படும் போது, குறிப்பிட்ட இடத்தை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில், அரசாணை பிறப்பிக்கப் பட்டு உள்ளது. இதன்படி, சர்தார் பட்டேல் சாலை விரிவாக்கத்திற்காக, சி.எல்.ஆர்.ஐ., மற்றும் ஐ.ஐ.டி.,யிடம் இருந்து இடம் எடுக்கப்பட்டது. இதற்கு இழப்பீடு பெறவில்லை. வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு ஒதுக்கிய இடத்தில், பயன்பாடு போக மீதமுள்ள இடத்தை, வணிக ரீதியாக பயன்படுத்தாமல், பொதுநலன் சார்ந்து பயன்படுத்த ஒதுக்க வேண்டும். அதற்கு, போக்குவரத்து துறை முயற்சி செய்ய வேண்டும் என, வேளச்சேரி பகுதிமக்கள் கூறினர்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us