/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூட்டை மூட்டையாக நாய், பூனைக்குட்டி உடல்கள் வேளச்சேரி புளூகிராஸ் அமைப்பில் கொடூரம்
/
மூட்டை மூட்டையாக நாய், பூனைக்குட்டி உடல்கள் வேளச்சேரி புளூகிராஸ் அமைப்பில் கொடூரம்
மூட்டை மூட்டையாக நாய், பூனைக்குட்டி உடல்கள் வேளச்சேரி புளூகிராஸ் அமைப்பில் கொடூரம்
மூட்டை மூட்டையாக நாய், பூனைக்குட்டி உடல்கள் வேளச்சேரி புளூகிராஸ் அமைப்பில் கொடூரம்
ADDED : மார் 02, 2024 12:04 AM

சென்னை, சென்னையைச் சேர்ந்தவர் முரளீதரன். இவர் மத்திய விலங்குகள் நல வாரியத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பிஉள்ளார். அதில், அவர் கூறியிருந்ததாவது:
வேளச்சேரியில் உள்ள புளூகிராஸ் அமைப்பிற்கு தினசரி நுாற்றுக்கணக்கான நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் கொண்டு வரப்படுகின்றன. அவற்றுக்கு முறையான மருத்துவம் பார்க்காததால், இறந்து போகின்றன.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார். இதுபோல மேலும் சிலரும், இப்பிரச்னை தொடர்பாக புகார் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, வேளச்சேரி, புளூகிராஸ் அமைப்பில் ஆய்வு மேற்கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க, மத்திய விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் மாநில விலங்குகள் நல வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட விலங்குகள் நல வாரிய இணை கமிஷனர் ஜெயந்தி தலைமையில், சைதாப்பேட்டை விலங்குகள் நல மருத்துவர் நவமணி, மாநில விலங்குகள் நல மருத்துவர் தேவி மற்றும் மாநில விலங்குள் நல அரசு உறுப்பினர் ஸ்ருதி ஆகியோர் இடம் பெற்ற குழுவினர், நேற்று முன்தினம் வேளச்சேரி புளூகிராசில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, 21 நாய்க்குட்டிகள் மற்றும் 15 பூனைக் குட்டிகள் இறந்த நிலையில், சாக்கு பையில் போட்டு உயிருள்ள நாய் குட்டிகள் இருக்கும் பகுதியில் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அந்த இடம் முழுதும் கடும் துர்நாற்றம் வீசியது.
அங்குள்ள அனைத்து விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உரிய பராமரிப்பு அளிக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது.
நாய்க்குட்டிகளுக்கு வைத்திருந்த உணவுகளை எலிகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பதும், கெட்டுப்போன பால், பருப்பு, சுகாதாரமற்ற உணவு விலங்குகளுக்கு வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
மேலும், தினசரி நுாற்றுக்கணக்கான விலங்குகள், பறவைகள் கொண்டு வரப்பட்டதும், நாள்தோறும் 45 முதல் 50 விலங்குகள் மற்றும் பறவைகள் இறந்ததாகவும், அவற்றை அங்கேயே எரித்ததும், ஆவணங்கள் வாயிலாக தெரியவந்தது. அத்துடன் ஒவ்வொரு மாதமும் 20க்கும் மேற்பட்ட விலங்குகள் கருணைக் கொலை செய்யப்பட்ட தகவலும் விசாரணையில் தெரியவந்தது.
விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆவணங்கள் முறையாக பராமரிக்காததும் கண்டறியப்பட்டது. மேலும், பல விதிமீறல்கள் நடந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அங்கு, 500க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் உள்ள நிலையில், நான்கு மருத்துவர்கள் மட்டுமே பணியில் இருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து ஆய்வுக் குழுவினர் கூறியதாவது:
வேளச்சேரி, புளூகிராசில் தினசரி 50க்கும் மேற்பட்ட விலங்குகள் இறந்துள்ளன. அதற்கான காரணங்கள் கிடைக்கவில்லை.
அனைத்து ஆவணங்களும் முறையாக பராமரிக்கவில்லை. அந்த நிர்வாகத்திடம் இருந்து மேலும் பல ஆவணங்களை கோரியுள்ளோம். அதனுடன் சேர்த்து ஆய்வு செய்த தகவல்கள் முழுவதையும் மத்திய விலங்குகள் நல வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படும். அதன்பின், மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

