/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் ரூ.735 கோடி பணியில் 60 சதவீதம் நிறைவு
/
எழும்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் ரூ.735 கோடி பணியில் 60 சதவீதம் நிறைவு
எழும்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் ரூ.735 கோடி பணியில் 60 சதவீதம் நிறைவு
எழும்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் ரூ.735 கோடி பணியில் 60 சதவீதம் நிறைவு
UPDATED : செப் 18, 2025 12:32 AM
ADDED : செப் 18, 2025 12:24 AM
சென்னை, 'எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளில், தற்போது 60 சதவீதம் முடிந்துள்ளது' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. அடுத்த 50 ஆண்டுகளில் ரயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, 734.91 கோடி ரூபாயிலான மறுசீரமைப்பு பணிகள், கடந்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கியது.
முதற்கட்டமாக, எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஊழியர்கள், அதிகாரிகள் குடியிருப்புகள் இடிப்பு, மரங்கள் அகற்றுதல் பணி முடிக்கப்பட்டு உள்ளன.
காந்தி இர்வின் சாலை பக்கத்தில், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க அடித்தளம் அமைக்கும் பணி முடிந்துள்ளது.
பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க அடித்தளம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
இதேபோல், ரயில் நிலையங்களின் உட்பகுதிகளில் நடைமேம்பாலம், நடைமேடை விரிவாக்கம், மேற்கூரை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயில் பெரிய ரயில் நிலையங்களில் நடந்து வரும் மறுசீரமைப்பு பணிகளில், எழும்பூர் முக்கியமானது. விமான நிலையத்துக்கு இணையான வசதிகளுடன் பணிகள் நடந்து வருகின்றன.
பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக இடம், பார்சல் அலுவலகம், பயணியர் ஓய்வு அறைகள், டிஜிட்டல் தகவல்கள் திரைகள், 'சிசிடிவி' கேமரா, லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள் என, பயணியருக்கான அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
ஒட்டுமொத்த பணிகளில் தற்போது, 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை முடித்து, அடுத்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***