/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலி ஆவணம் தயாரித்த ஏஜென்டுகள் 6 பேர் கைது
/
போலி ஆவணம் தயாரித்த ஏஜென்டுகள் 6 பேர் கைது
ADDED : டிச 10, 2024 12:30 AM

சென்னை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், 'இந்திய பயணியர் சிலர், போலியான விபரங்களை கொடுத்து, பாஸ்போர்ட் பெற்று, வெளிநாடுகளுக்கு செல்ல முயல்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட பயணியர் மட்டுமின்றி, அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் ஏஜென்டுகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டு இருந்தனர்.
போலி பாஸ்போர்ட் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
மதுரை, பரசுராமன்பட்டியில், 'சாய் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ்' என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வரும் சதீஷ்குமார், உசிலம்பட்டியில் ராமாயி இ - சேவை மையம் நடத்தி வரும் கல்யாண், தேவகோட்டையில் டிராவல்ஸ் நடத்தி வரும் நல்லா முகமது உள்ளிட்டோர், மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
வயது மூப்பு உள்ளிட்ட பல காரணங்களால், மீண்டும் வெளிநாடு செல்ல இயலாத நபர்களிடம், லட்சக்கணக்கில் பணம் பெற்று, அவர்களது ஆவணங்களில் உள்ள பிறந்த தேதிகளை மறைத்து, இ - சேவை மையம் வாயிலாக போலியான ஆதார் மற்றும் பான் கார்டுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
பின், போலி ஆவணங்களை சமர்பித்து பெறப்பட்ட பாஸ்போர்ட் வாயிலாக, விசா ஏற்பாடு செய்து கொடுத்து, வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பியுள்ளனர்.
தலைமறைவாக இருந்த ஏஜென்டுகள் சதீஷ்குமார், 46, கல்யாண், 40, நல்லா முகமது, 60, நாசர் அலி, 47, பவுசல் ரஹமான், 29, குமுார், 48, ஆகிய ஆறு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

