/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்கு கால்வாய் மாயம்; உபரிநீர் செல்ல வழியில்லை நன்மங்கலம் ஏரிக்கு விமோசனம் பிறக்குமா?
/
போக்கு கால்வாய் மாயம்; உபரிநீர் செல்ல வழியில்லை நன்மங்கலம் ஏரிக்கு விமோசனம் பிறக்குமா?
போக்கு கால்வாய் மாயம்; உபரிநீர் செல்ல வழியில்லை நன்மங்கலம் ஏரிக்கு விமோசனம் பிறக்குமா?
போக்கு கால்வாய் மாயம்; உபரிநீர் செல்ல வழியில்லை நன்மங்கலம் ஏரிக்கு விமோசனம் பிறக்குமா?
ADDED : ஜூலை 17, 2024 12:19 AM

நன்மங்கலம், நன்மங்கலம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர், நெமிலிசேரி ஏரிக்கு செல்லக்கூடிய போக்கு கால்வாயை காணவில்லை. இதனால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் ஏரியின் உபரி நீர் ஊருக்குள் புகுந்து, வெள்ளத்தை உருவாக்குகிறது.
மேடவாக்கம் அடுத்த நன்மங்கலத்தில், 150 ஏக்கர் பரப்பில் நன்மங்கலம் ஏரி உள்ளது. கோடை காலத்திலும் தண்ணீர் வற்றாது உள்ள இந்த ஏரிக்கு ராஜகீழ்ப்பாக்கம், சிட்லபாக்கம், செம்பாக்கம் ஆகிய ஏரிகளிலிருந்து நீர் வரத்து உள்ளது.
நன்மங்கலம் ஏரியில் நீர் நிரம்பிய பிறகு, மீதமுள்ள உபரி நீர், போக்கு கால்வாய் வழியாக நெமிலிசேரி ஏரியை சென்றடையும். நெமிலிசேரி ஏரியில் நீர் நிரம்பிய பிறகு, அதிலுள்ள உபரி நீர் கீழ்க்கட்டளை ஏரிக்கு சென்று, அதன் பிறகு நாராயணபுரம் ஏரியை அடையும்.
நாராயணபுரம் ஏரி நிரம்பி வழிந்தால், அதிலுள்ள உபரி நீர் பள்ளிக்கரணையிலுள்ள சதுப்பு நிலத்திற்கு சென்றுவிடும்.
கடந்த 30 ஆண்டுகளில், சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்ததால், நன்மங்கலம் ஏரியின் அளவு இப்போது பாதியாக சுருங்கிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளில் நன்மங்கலம் ஏரியிலிருந்து நெமிலிசேரி ஏரிக்கு உபரி நீர் செல்கிற போக்கு கால்வாய் முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டது. தற்போது, போக்கு கால்வாய் இருந்த சுவடே இல்லை.
பகுதிவாசிகள் கூறியதாவது:
மழைக்காலத்தில் நன்மங்கலம் ஏரி நிரம்பி வழியும்போது, உபரி நீர் செல்வதற்கு போக்கு கால்வாய் இல்லை. இதனால், அருகிலுள்ள அருள் முருகன் நந்தவனம் நகர் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்து விடுகிறது. ஒவ்வொரு மழைக்காலத்திலும், இப்பகுதி தனி தீவு போலவே காட்சியளிக்கும்.
தவிர, கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக ஏரி துார்வாரவில்லை. இதனால், ஏரியின் நான்கு பக்க கரைகளும் மிகுந்த பலவீனமாக உள்ளன.
ஏரி துார்வாரப்படாததால், ஆகாய தாமரை செடிகளும், வேலிக்காத்தான் செடிகளும் ஏரி முழுக்க பரவியுள்ளது. மேலும், பல்லாவரம் பகுதியிலிருந்து கழிவு நீரும் கலந்து, ஏரியின் இயல்பு நிலை கெட்டுள்ளது.
ஏரியை துார்வாரினால் இதன் கொள்ளளவு மூன்று மடங்கு அதிகமாகி, அருகிலுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.
தற்போது, ஏரியை சுற்றி 10க்கும் மேற்பட்ட தனியார் நீர் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் வாயிலாக ஆழ்துளைக் கிணறுகள், உறை கிணறுகள் அமைக்கப்பட்டு, தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் எடுத்து, அழிவின் விழிம்பில் உள்ள நன்மங்கலம் ஏரிக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். மேலும், காணாமல் போன போக்கு கால்வாய் பகுதிகளை மீட்டெடுத்து, உபரி நீர் செல்வதற்கு உரிய வழித்தடத்தையும் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

