/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூரை இல்லாத நிழற்குடையால் வெயிலில் பயணியர் அவதி
/
கூரை இல்லாத நிழற்குடையால் வெயிலில் பயணியர் அவதி
ADDED : ஏப் 29, 2024 01:40 AM

சிந்தாதிரிப்பேட்டை:சென்னையில் ஏப்ரல் மாதம் துவக்கத்திலேயே வெயில் சதம் அடிக்க துவங்கி விட்டது. அனல் காற்றும் வீசுவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர்.
அப்படியே வெளியில் சென்றாலும், குடைகளுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதில், பேருந்தில் நாள்தோறும் பயணம் செய்யும் பயணியர், பேருந்து வரும் வரை நிழற்குடையை தான் நம்பியுள்ளனர்.
சென்னையில், 'மிக்ஜாம்' புயலில் பல இடங்களில் பயணியர் நிழற்குடைகள் சேதமடைந்தன. சில இடங்களில் உள்ள நிழற்குடைகள் கூரை இல்லாமல் உள்ளன. மேலும், பேருந்து தாமதமாக வரும் நிலையில், பயணியர் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகில் பஸ் நிறுத்தம் இடம் உள்ளது. இங்கு, இரண்டு பயணியர் நிழற்குடைகள் உள்ளன. அதில், ஒன்று கூரை இல்லாமல் காணப்படுகிறது.
அதேபோல், ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் பயணியர் நிழற்குடைகள் சேதமடைந்து காணப்படுவதால், அங்குள்ள மரத்தின் நிழலில் காத்திருந்து பேருந்தில் பயணம் செய்கின்றனர்.
மழைக்காலம் முடிந்து, கோடைக்காலம் துவங்கி விட்டது. அதன்பின், லோக்சபா தேர்தல் வந்ததால், சில பணிகளை அரசால் செய்ய முடியவில்லை.
மேலும், மக்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டியதில், பயணியர் நிழற்குடை சீரமைக்கும் பணியும் வருகிறது.
எனவே, சென்னை மாநகராட்சி பகுதிகளில் சேதமடைந்த நிழற்குடைகளை கணக்கெடுத்து, அவற்றை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

