/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆர்.கே.நகரில் வாலிபரை தாக்கிய மூவருக்கு சிறை
/
ஆர்.கே.நகரில் வாலிபரை தாக்கிய மூவருக்கு சிறை
ADDED : ஏப் 30, 2024 01:01 AM
சென்னை கொருக்குப்பேட்டை கோபால் ரெட்டி நான்காவது தெருவைச் சேர்ந்தவர் அன்பு, 25. ராயப்பேட்டையில் உள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்த இவர், கடந்த 2020 டிச., 14ம் தேதி, தன் நண்பர் மணிகண்டனுடன் சாப்பிடச் சென்றுள்ளார்.
மணலி சாலை சுண்ணாம்பு கால்வாய் அருகே உள்ள ஹோட்டல் முன், தன் நண்பருடன் அன்பு நின்றிருந்தார்.
அப்போது, அங்கிருந்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஹரி, அவரது நண்பர்கள் சரவணன், விக்கி ஆகியோர் திடீரென தகராறில் ஈடுபட்டு, ஸ்டீல் பிளேட்டால் அன்புவை தாக்கியுள்ளனர். தலையில் படுகாயமடைந்த அன்பு, மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஆர்.கே.நகர் போலீசில் அன்புவின் தாய் செல்வி அளித்த புகாரின்படி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட ஐந்தா-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் முன் நடந்தது. போலீசார் தரப்பில், மாநகர கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் பகவதிராஜ் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'மூவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன. எனவே, ஹரிக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், சரவணன், விக்கிக்கு தலா நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்படுகின்றன.
மேலும், அபராதமாக தலா 7,500 ரூபாய் விதிக்கப்படுகிறது' என தீர்ப்பளித்தார்.

