/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் போதிய 'ஏசி' பஸ் இல்லை கூடுதலாக இயக்க பயணியர் எதிர்பார்ப்பு
/
சென்னையில் போதிய 'ஏசி' பஸ் இல்லை கூடுதலாக இயக்க பயணியர் எதிர்பார்ப்பு
சென்னையில் போதிய 'ஏசி' பஸ் இல்லை கூடுதலாக இயக்க பயணியர் எதிர்பார்ப்பு
சென்னையில் போதிய 'ஏசி' பஸ் இல்லை கூடுதலாக இயக்க பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : மார் 28, 2024 12:18 AM
சென்னை, சென்னையில் 'ஏசி' பேருந்துகளுக்கு அதிக தேவை இருந்தும், கூடுதலாக ஏசி பேருந்துகளை இயக்குவதில்லை என, பயணியர் புகார் தெரிவித்து உள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சாதாரண கட்டணம் - 1,559, விரைவு மற்றும் சொகுசு - 1,674 மற்றும் 207 சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் 31.09 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
தி.நகர் - மாமல்லபுரம், தாம்பரம் - பிராட்வே, கோயம்பேடு - சோழிங்கநல்லுார், தாம்பரம் - திருவான்மியூர், பிராட்வே - கோவளம் உள்ளிட்ட சில வழித்தடங்களில், 48 ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக ஏசி பேருந்துகளின் சேவை அதிகரிக்கவில்லை. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏசி பேருந்துகளின் தேவையும் அதிகரித்து வருகிறது.
இருப்பினும், கூடுதல் ஏசி பேருந்துகள் இயக்காதது, பயணியர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.,
தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் சடகோபன் கூறியதாவது:
சென்னையில் பொது போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில், மாநகர போக்குவரத்து கழகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.
மாநகர போக்குவரத்து கழகத்தின் எல்லை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி என விரிவடைந்து உள்ளது. சென்னையில் சில மாதங்களை தவிர, பெரும்பாலான மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.
குறிப்பாக, கோடை விடுமுறையையொட்டி உள்ள இரண்டு மாதங்களில், ஏசி பேருந்துகளில் மக்கள் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுவர்.
பயணியர் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் ஏசி பேருந்துகளை இயக்கினால், பயணியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கால் டாக்சி உள்ளிட்ட இதர வாடகை வாகனங்களில் செல்வோரும், மாநகர ஏசி பேருந்துகளில் பயணம் செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
கொரோனா பாதிப்பிற்கு பின், பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக ஏசி பேருந்துகளின் பயன்பாடு அதிகரிக்கவில்லை.
ஏசி பேருந்துகளை இயக்குவதில் பராமரிப்பு செலவும் அதிகம். எனவே, அடுத்தகட்டமாக வரும் புதிய பேருந்துகளில், சில வழித்தடங்களில் ஏசி இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

