/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீண்டும் இரவில் தொடரும் மின் வெட்டு பிரச்னை...துாக்கம் போச்சு!:வேளச்சேரி, மணலி பகுதிவாசிகள் கடும் தவிப்பு
/
மீண்டும் இரவில் தொடரும் மின் வெட்டு பிரச்னை...துாக்கம் போச்சு!:வேளச்சேரி, மணலி பகுதிவாசிகள் கடும் தவிப்பு
மீண்டும் இரவில் தொடரும் மின் வெட்டு பிரச்னை...துாக்கம் போச்சு!:வேளச்சேரி, மணலி பகுதிவாசிகள் கடும் தவிப்பு
மீண்டும் இரவில் தொடரும் மின் வெட்டு பிரச்னை...துாக்கம் போச்சு!:வேளச்சேரி, மணலி பகுதிவாசிகள் கடும் தவிப்பு
UPDATED : ஜூலை 29, 2024 01:58 AM
ADDED : ஜூலை 29, 2024 01:56 AM

திருவொற்றியூர்:சென்னையில் இரவு நேர மின் தடை மணிக்கணக்கில் நீடிப்பதால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். மின் ஊழியர்கள் பற்றாக்குறை, மின் சாதன மேம்பாடு, பராமரிப்பில்லாத மின்மாற்றிகளை தொடர்ந்து இயக்குவது போன்றவையே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம், உயர் மின் கோபுரங்கள் வழியாக, 400 கிலோ வாட் திறனுடைய மணலி மின் பகிர்மான நிலையத்திற்கு எடுத்து வரப்படுகிறது.
அங்கிருந்து திருவொற்றியூர், மணலி, எண்ணுார், மணலிபுதுநகரில், 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சில நாட்களாக, திருவொற்றியூர் மேற்கு பகுதிகளான, கலைஞர் நகர், ராஜா சண்முகம் நகர், அம்பேத்கர் நகர் போன்ற இடங்களில், மூன்று நாட்களாக இரவில் மின் தடை ஏற்படுகிறது.
இரவில் 11:00 மணிக்கு தடைபடும் மின்சாரம், ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் கழித்தே சீராகிறது.
திருவொற்றியூர் கிழக்கு, மாணிக்கம் நகர் போன்ற நெடுஞ்சாலை ஒட்டிய பகுதிகளில் நள்ளிரவு, 1:00 மணிக்கு மின்சாரம் தடைபடுவது வாடிக்கையாகவே மாறியுள்ளது.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், புழல், புத்தகரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இரு நாட்களாக, இரவில் மின் தடை ஏற்படுகிறது.
மூன்று மணி நேரம்
மதுரவாயலில் உள்ள 110 கே.வி., துணை மின் நிலையம் 230 கே.வி.,யாக மாற்றப்படுவதால், அப்பகுதியில் இரவில் மின் தடை அதிகரித்துள்ளது.
வளசரவாக்கம் மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில், புதை மின் தடம் பதிக்கும் பணியால் நள்ளிரவு 12:00 மணிக்கு நிறுத்தப்படும் மின் தடை, இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை நீடிக்கிறது.
ஐ.டி., நிறுவனங்கள் நிறைந்த சோழிங்கநல்லுார், வேளச்சேரி, கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரியில் நேற்று முன்தினம் இரவு மூன்று மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்பட்டது.
தாம்பரம் அடுத்த வண்டலுார் பகுதியில் தினமும் பகல் ஐந்து முறை, இரவு ஐந்து முறை மின் தடை ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை மின் தடைபோதும் 10 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் கழித்தே மின்சாரம் வருகிறது.
இதனால், இரவில் நிம்மதியாக துாங்க முடியாமல் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இது குறித்து, மின் நுகர்வோர் கூறியதாவது:
சென்னையின் பல இடங்களில் நடந்துவரும் மின் சாதன மேம்பாட்டு பணியை காரணம் காட்டி, முன்னறிவிப்பின்றி மின் வெட்டு செய்கின்றனர். மின் வடம், மின்மாற்றி, மின் பகிர்மான பெட்டி உள்ளிட்டவை முறையாக பராமரிக்காததால், அவற்றிலும் அடிக்கடி பழுது ஏற்படுவது மற்றொரு காரணம்.
இதனால், 'ஏசி' மின் விசிறி போன்ற மின் சாதனங்களை இயக்க முடியாமல், வயதானோர், நோயாளிகள், குழந்தைகள் இரவு முழுதும் புழுக்கத்தால் துாக்கமின்றி தவிக்கின்றனர். அதேபோல கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது.
சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால், அவர்கள் அழைப்பை எடுப்பதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊழியர்கள் பற்றாக்குறை
பெயர் குறிப்பிட விரும்பாத மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சில நாட்களாக வெயில் அதிகரித்து, இரவில் புழுக்கமான சூழல் நிலவி வருவதால், 'ஏசி' மற்றும் மின்விசிறி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
இதனால், உயர் அழுத்த மின்சாரத்தை தாங்க முடியாமல், நேற்று முன்தினம், பல இடங்களில் மின்மாற்றிகள் 'ட்ரிப்' ஆகின. இதன் எதிரொலியாகவே, பல இடங்களில் இரவு நேர மின் தடை ஏற்பட்டது.
தவிர, துணை நிலையங்களில் இரவு நேர பணி, கேபிள் பதிப்பு உள்ளிட்ட பணிகளும் ஒவ்வொரு ஏரியாகவே நடந்து வருகின்றன. இப்பணிகளில் முறையாக தகவல் தெரிவித்து மின் தடை செய்கிறோம்.
குறிப்பாக, திருவொற்றியூர், மணலி, செம்மஞ்சேரி உட்பட சென்னையின் பல இடங்களில், உதவி செயற்பொறியாளர் பணியிடம், காலியாக உள்ளது.
அதேபோல், களப்பணியாளர்கள் துவங்கி, கடைநிலை ஊழியர் வரையிலான பணியிடங்களும் காலியாக இருக்கின்றன.
வேறு வழியின்றி, ஒப்பந்த ஊழியர்களை வைத்து, பிரச்னைகளை சமாளித்து வருகிறோம்.
இதற்கிடையே, மின்மாற்றிகளின் கீழே குப்பை கொட்டுவதாலும் தீ விபத்து ஏற்பட்டு, மின் வினியோக பணி பாதிக்கப்படுகிறது.
திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் அருகே உள்ள மின்மாற்றியின் கீழே கொட்டிய குப்பையில் தீ பிடித்ததால், அப்பகுதியில் அதிகளவு புகார் வந்தது. அப்பகுதி மின் வினியோகத்தை சீரமைத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடிக்கடி மின் தடை
மின் தடை குறித்த பிரச்னைகளை கையாள்வதில், மணலி அதிகாரிகள் இடையே மெத்தனம் நிலவி வருகிறது. இதனால் மூன்று நாட்களாகவே, இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கேட்டால், ஊழியர்கள் பற்றாக்குறை, மின் உபகரணங்கள் போதிய அளவு இல்லை என அலட்சியமாக கூறுகின்றனர்.
எம்.ஜோசப், 47, நுகர்வோர், மணலி.
வாரந்தோறும் எரியும் மின் பகிர்மான பெட்டி
வேளச்சேரியில்
அடுக்குமாடி கட்டடங்கள், மால்கள், வணிக நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில்
உள்ளதால், மின்நுகர்வு முன்பை விட அதிகரித்துள்ளது.
அதேபோல் ஓ.எம்.ஆரில் 24 மணி நேரம் செயல்படும் ஐ.டி., நிறுவனங்கள் உள்ளதால், தடையற்ற மின்சாரம் தேவைப்படுகிறது.
ஆனால்,
இப்பகுதிகளில் கேபிள், மின்மாற்றி, மின்பகிர்மான பெட்டிகள் அடிக்கடி
வெடிப்பதால், மின் தடை பிரச்னை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பகுதிமக்கள் கூறியதாவது:
வேளச்சேரி
பகுதியில் இரு ஆண்டுகளுக்கு முன்தான் பல மின் பகிர்மான பெட்டிகளை
பொருத்தினர். ஆனால், வாரந்தோறும் ஏதாவது ஒரு மின் பகிர்மான பெட்டியில்
தீப்பிடிக்கிறது.
மின் பகிர்மான பெட்டிகளை சீரமைக்க, பொருட்கள்
வாங்கித்தர எங்களிடமே கேட்கின்றனர். பணம் கொடுக்கும் நபர்கள் உள்ள
பகுதிகளில் உடனே வேலை நடக்கிறது.
மற்ற பகுதிகளில் கேட்டால், ஏதாவது
காரணம் சொல்லி கிடப்பில் போடுகின்றனர்.அடிக்கடி தீ பிடிப்பதால் அதன் தரம்
குறித்து சந்தேகம் உள்ளது. தீ பிடிக்கும்போது மின்தடை ஏற்படுவதால்,
துாக்கம் இல்லாமல் தவிக்கிறோம்.
அடிக்கடி தீ பிடிப்பதால் மின்
பகிர்மான பெட்டிகளின் தரம் குறித்து சந்தேகம் உள்ளது. இது குறித்து மின்
வாரியம் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

