/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆர்.ஏ.புரம் அய்யப்பன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
/
ஆர்.ஏ.புரம் அய்யப்பன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
ஆர்.ஏ.புரம் அய்யப்பன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
ஆர்.ஏ.புரம் அய்யப்பன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : மார் 28, 2024 12:17 AM

சென்னை, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில், 'வடசபரி' என அழைக்கப்படும் 18 படிகளுடன் கூடிய அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது.
சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள், மாலை அணிந்து, விரதம் இருந்து இருமுடியுடன் இங்குள்ள அய்யப்பனை தரிசிப்பது வழக்கம்.
இக்கோவிலில் கன்னிமூல கணபதி, நாகராஜன், சின்ன கருப்பர், கருப்பாயி, பெரிய கருப்பர் சன்னதிகளும் உள்ளன.
சில மாதங்களுக்கு முன் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு, 4.50 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 24ம் தேதி யாகசாலை வளர்க்கப்பட்டு, அனுக்ஞை, விக்னேஸ்வர, கோ, தன பூஜைகள், கணபதி, நவக்கிரஹ ஹோமம், மஹா பூர்ணாஹூதி, வாஸ்து சாந்தி ஹோமம் நடந்தன.
மஹா கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7:15 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், 6ம் கால யாக சாலை பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து, மஹா பூர்ணாஹூதியும், கடப் புறப்பாடும் நடந்தது.
காலை, 10:45 மணிக்கு மூலவர் சன்னிதி, கோபுர கலசங்களுக்கு கும்பநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து, நேற்று இரவு 7:00 மணிக்கு அய்யப்ப சுவாமி வெள்ளி ரதத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கும்பாபிஷேக விழாவில் திருப்பணிக்குழு தலைவர் ஏ.சி.முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவில் அறங்காவலர் உறுப்பினரான செட்டிநாட்டின் குமார ராணி மீனா முத்தையா, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு கடந்த மூன்று நாட்கள் அறுசுவை உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.

