/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆபத்தை உணராமல் கடலில் குளிக்கும் பொதுமக்கள்
/
ஆபத்தை உணராமல் கடலில் குளிக்கும் பொதுமக்கள்
ADDED : ஏப் 29, 2024 01:37 AM

மெரினா:ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதை, போலீசார் தடுப்பதில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சென்னையில் பல்வேறு இடங்கள் இருந்தாலும், செலவே இல்லாத ஒரு சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலாதலமாக மெரினா கடற்கரை உள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோடைக்கால விடுமுறையில், மெரினாவிற்கு நான்கு மடங்கு கூட்டம் வரும். அவ்வாறு வரும் பொதுமக்கள், சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, கடலில் இறங்கி குளிக்கின்றனர். இதில் சிலர், சற்று துாரம் ஆழமான பகுதிக்கும் செல்கின்றனர்.
இதைப் பார்க்கும் சிறுவர், சிறுமியர், இளைஞர்களும் கடலில் இறங்கி ஆழப்பகுதிக்கு செல்லும் போது, ராட்சத அலையில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் ரோந்து வரும் போலீசார், பின் கடற்கரை பக்கம் வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
அப்படியே வந்தாலும், பெயரளவுக்கு மட்டும் ஒலிபெருக்கி வாயிலாக, கடலில் இறங்கி குளிக்கக் கூடாது என எச்சரித்து விட்டுச் செல்கின்றனர்.
இதனால், மீண்டும் பொதுமக்கள் கடலில் இறங்கிக் குளிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
இந்த வகையில், ஆண்டுக்கு சராசரியாக 20 பேராவது கடலில் மூழ்கி இறக்கின்றனர். அதில் பலர் இளைஞர்கள் என்பது வேதனை.
கடந்த 2018ம் ஆண்டு கடலில் மூழ்கி மாயமான 20 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இன்று வரையில் கடலில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
பொதுமக்களும், போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இருந்தாலும், பொதுமக்கள் உயிரிழப்பை தடுக்க, காலை முதல் மாலை வரையில் கடற்கரை பகுதியில், போலீசார் ரோந்து வரவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

