/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லஞ்சம் கேட்போர் குறித்து புகார் அளிக்க அழைப்பு
/
லஞ்சம் கேட்போர் குறித்து புகார் அளிக்க அழைப்பு
ADDED : ஏப் 23, 2024 01:06 AM
சென்னை, சி.எம்.டி.ஏ.,வில் கட்டுமான திட்ட அனுமதிக்கு பொது மக்கள், கட்டுமான நிறுவனங்கள் சார்பில் விண்ணப்பங்கள் தாக்கலாகின்றன. இந்த கோப்புகளை கையாள்வதில், அதிகாரிகள் லஞ்ச வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, திட்ட அனுமதி பணிகளை 'ஆன்லைன்' முறைக்கு மாற்ற சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இந்த புதிய முடிவு 2022 ஜூனில் துவக்கப்பட்டது. ஆனால், தகுதியான விண்ணப்பங்களுக்கும் திட்ட அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
திட்ட அனுமதி மட்டுமல்லாது, மனைப்பிரிவு அனுமதி, நில வகைபாடு மாற்றம் போன்ற பிரிவு விண்ணப்பங்களும் லஞ்சம் இன்றி நகர்வதில்லை என, பல்வேறு அமைப்புகள் சமூக வலைதளங்கள் வாயிலாக புகார் தெரிவித்துள்ளன.
இது குறித்து சமூக வலைதளம் வாயிலாக சி.எம்.டி.ஏ., நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
சி.எம்.டி.ஏ.,வில் ஆன்லைன் திட்டம் அமலுக்கு வந்தது முதல், மேனுவல் முறையில் எந்த விண்ணப்பத்தையும் ஏற்பதில்லை.
ஒவ்வொரு விண்ணப்பத்தின் பரிசீலனை நிலவரத்தை அதில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள், பொறியாளர்கள் இணையதளம் வாயிலாக கண்காணிக்க முடியும்.
கட்டட அனுமதி விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு இ - மெயில், எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் அதிகாரிகள் முறைகேடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் அடைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், யாராவது லஞ்சம் கேட்டால், உரிய ஆதாரத்துடன் விண்ணப்பதாரர்கள் புகார் அளிக்கலாம்.
புகார்கள் அடிப்படையில், குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சி.எம்.டி.ஏ., நிர்வாகத்துக்கு எவ்வித தயக்கமும் இல்லை.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

