/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமானத்தில் பயணியருடன் போதையில் ரகளை
/
விமானத்தில் பயணியருடன் போதையில் ரகளை
ADDED : மே 14, 2024 12:36 AM
சென்னை, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீன் காந்தி, 35. இவர் சென்னையில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார்.
அவருடைய 5 வயது மகளுடன், ஆமதாபாதிற்கு விமானத்தில் செல்வதற்காக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். போதையில் இருந்த அவர், விமானம் புறப்படுவதற்கு முன்னதாகவே, சக பயணியரிடம் பிரச்னை செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரையடுத்து விமானத்தை நிறுத்தி, பிரவீன் காந்தியையும் அவருடைய 5 வயது மகளையும், விமானத்தில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் கீழே இறக்கினர்.
இதனால், அந்த விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது. பின், சென்னை விமான நிலைய போலீசில் பிரவீன் காந்தி ஒப்படைக்கப்பட்டார். அவருடன் 5 வயது மகள், அழுது கொண்டே காவல் நிலையம் சென்றார். பிரவீன் காந்திக்கு போதை தெளியும் வரை, அமைதியாக உட்கார வைத்தனர்.
போதை தெளிந்து, 'சொந்த ஊருக்கு செல்லும் ஆர்வத்தில், அதிகமாக மது அருந்தி வந்து விட்டேன். தயவுசெய்து என்னை மன்னித்து விட்டு விடுங்கள்' என கெஞ்சினார்.
போலீசார் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி, விசாரணைக்கு அழைத்தால் மீண்டும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவரை அனுப்பி வைத்தனர். பின், நேற்று முன்தினம் நள்ளிரவில் மற்றொரு விமானத்தில் ஆமதாபாதுக்கு, தன் மகளுடன் புறப்பட்டு சென்றார்.

