/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பால் முடிவு 4 சாலைகள் விரிவாக்கம்! ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை
/
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பால் முடிவு 4 சாலைகள் விரிவாக்கம்! ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பால் முடிவு 4 சாலைகள் விரிவாக்கம்! ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பால் முடிவு 4 சாலைகள் விரிவாக்கம்! ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை
ADDED : ஜூலை 16, 2024 11:49 PM

சென்னை,
சென்னையில், போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் நான்கு சாலைகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை விரிவாக்கம் செய்ய, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஓட்டேரி குக்ஸ் சாலையை விரிவாக்கம் செய்தது போல், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு சாலைகளும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.
சென்னை மாநகராட்சி பகுதிகளில், 1,857 கி.மீ., நீளமுள்ள 10,628 சாலைகள் உள்ளன. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உத்தேசம்
அதன்படி, 1.25 கோடி மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
இதனால், காலை மற்றும் மாலை, 'பீக் ஹவர்ஸ்'களில், பிரதான சாலை முதல் உட்புற சாலை வரை, போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னையிலுள்ள பெரும்பாலான சாலைகளை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வுடன் இணைந்து விரிவாக்கம் செய்ய, மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் சமீபத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில், சென்னையின் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதில், முதல் கட்டமாக, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, அடையாறு எல்.பி., சாலை, நியூ ஆவடி சாலை ஆகிய நான்கு சாலைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, 80 அடி சாலையாக உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, 100 அடி சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது.
நெரிசல் குறையும்
இதன் வாயிலாக மயிலாப்பூர், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், 60 அடி அகலம் உள்ள எல்.பி., சாலை, 100 அடி சாலையாக அகலப்படுத்தப்படுத்தப்படும். இதன் வாயிலாக மத்திய கைலாஷ், திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
அதே போல, 60 அடி அகலம் உள்ள நியூ ஆவடி சாலையில், சில குறிப்பிட்ட இடங்களில் 100 அடி சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது. மேலும், 33 அடி கொண்ட பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, 60 அடி சாலையாக மாற்றப்பட உள்ளது.
இந்த சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து அப்புறப்படுத்தவும், சாலையை விரிவுபடுத்துவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யவும், பணிகள் துவங்கியுள்ளன.
அறிக்கை தயார் செய்தே பின், அரசிடம் ஒப்புதல் பெற்று, சென்னையில் சாலை விரிவாக்கப் பணி துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

