/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சைபர் குற்றங்கள் தொடர்பாக இதுவரை 35,000 புகார்கள்
/
சைபர் குற்றங்கள் தொடர்பாக இதுவரை 35,000 புகார்கள்
ADDED : ஏப் 26, 2024 12:18 AM

சென்னை, ''சைபர் குற்றங்கள் தொடர்பாக 35,000த்திற்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. எனவே மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்,'' என சைபர் கிரைம் கூடுதல் காவல்துறை இயக்குனர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.
சி.ஐ.ஓ., என அழைக்கப்படும் தலைமை தகவல் அதிகாரிகளின் கூட்டமைப்பில் 2,200 உறுப்பினர்கள் உள்ளனர். அதன் சென்னை பிரிவு சார்பில் 'சி.ஐ.ஓ., சங்கமத்தின் நம்ம சென்னை' எனும் பெயரில், 12வது ஆண்டு விழா, சென்னை, கிண்டியில் உள்ள ஐ.டிசி., கிராண்டு சோழா ஹோட்டலில் சமீபத்தில் நடந்தது.
இதில், இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து, 140க்கும் மேற்பட்ட சி.ஐ.ஓ.,க்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்கள் பங்கேற்றனர். விழாவில் சைபர் கிரைம் கூடுதல் காவல்துறை இயக்குனர் சஞ்சய் குமார் துவக்க உரை நிகழ்த்தினார்.
அவர் கூறியதாவது:
சைபர் கிரைம் பொறுத்தவரை கட்டணமில்லா தொலைபேசி எண் 1930க்கு, தினம் 1,000 அழைப்புகளுக்கு மேல் வருகின்றன.
இது இல்லாமல், பலர் நேரடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். அவற்றின் அடிப்படையில், ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதுவரை, 35,000 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த மூன்று மாதங்களில் வந்த 600 புகார்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறைந்த பட்சம் 1,000 ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாய் வரை இழந்தவர்கள் புகார் செய்கின்றனர். ஒரு சிலர், 4 - 6 கோடி ரூபாய் வரை கூட சைபர் மோசடியில் இழந்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இருப்பதில்லை. நாங்கள் தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பணத்தை இழந்தவர்கள், அடுத்த 24 மணிநேரத்தில், 'டோல் பிரி' எண்ணிற்கோ, நேரிலோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் இழந்த பணத்தை மீட்க முடியும்.
சைபர் குற்றங்கள் குறித்து தெரிந்தவர்கள், அது குறித்து குடும்பத்தார், உறவினர், அக்கம் பக்கத்தினர், நண்பர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

