/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
l 4 மாவட்டங்களில் 1,765! பதற்றமான ஓட்டுச்சாவடிகள்... l 'சிசிடிவி' கேமரா, போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
/
l 4 மாவட்டங்களில் 1,765! பதற்றமான ஓட்டுச்சாவடிகள்... l 'சிசிடிவி' கேமரா, போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
l 4 மாவட்டங்களில் 1,765! பதற்றமான ஓட்டுச்சாவடிகள்... l 'சிசிடிவி' கேமரா, போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
l 4 மாவட்டங்களில் 1,765! பதற்றமான ஓட்டுச்சாவடிகள்... l 'சிசிடிவி' கேமரா, போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
ADDED : ஏப் 10, 2024 12:37 AM

சென்னை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 1,765 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளில், கடந்த தேர்தல்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களை கருத்தில் கொண்டு, போலீஸ் மற்றும் 'சிசிடிவி' கேமரா பாதுகாப்பு பலத்தப்படுத்தபட்டு உள்ளது.
சென்னை மாவட்டத்தில், 18 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் மொத்தம் 3,719 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இத்தேர்தலில், 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
கடந்த தேர்தல்களில், வடசென்னை தொகுதியில், தண்டையார்பேட்டை லிட்டில் பிளவர் ஓட்டுச்சாவடியில் தகராறு ஏற்பட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது. அதேபோல், கொடுங்கையூர் பகுதியிலும், ஓட்டுச்சாவடி கைப்பற்றப்பட்டது.
மனுக்கள்
இதுபோன்று, கள்ள ஓட்டு போடப்பட்ட ஓட்டுச்சாவடிகள், தகராறு ஏற்பட்ட ஓட்டுச்சாவடிகள் என, 579 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக, இம்முறை கண்டறியப்பட்டன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின், தேர்தல் பொதுப்பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடமிருந்து பெற்ற மனுக்கள், கடந்த தேர்தலில் ஏற்பட்ட முறைகேடு அடிப்படையில் பதற்றமானவை, மிகவும் பதற்றமானவை, கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய ஓட்டுச்சாவடிகளை, தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னைமாவட்டத்தில், நுண்பார்வையாளர்கள் 923 பேர், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ளனர். காவல் பணிகளில், ஐந்து ஓட்டுச்சாவடிகள் உள்ள மையத்திற்கு ஒரு காவலர், ஐந்துக்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் உள்ள மையத்திற்கு இரு காவலர்கள் என, 9,277 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுச்சாவடி பணியாளர்களில், 20 சதவீதம் முன்னிருப்பு உட்பட, 19,419 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 19,097 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது 611 பதற்றமான, 23 மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் 135 ஓட்டுச்சாவடிகள் என, 769 ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
வாக்காளர் தகவல் சீட்டுகள் இதுவரை, 11.56 லட்சம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என 82 பேர், தங்கள் வீடுகளில் ஓட்டளித்துள்ளனர். 67 ஓட்டுப்பதிவு குழுக்கள் வாயிலாக, வீடு வீடாகச் சென்று ஓட்டுப்பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரச்சனை
காஞ்சிபுரம் தனித் தொகுதியில் 1,932 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இத்தொகுதிக்கு உட்பட்ட செங்கல்பட்டில் - 130, திருப்போரூர் - 78, மதுராந்தகம் - 46, செய்யூர் - 41, உத்திரமேரூர் - 31, காஞ்சிபுரம் - 46 என மொத்தம் 372 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன.
இந்த ஓட்டுச்சாவடிகளில், பிரச்னைக்குரிய அரசியல் பின்புலம் உடைய 62 பேரிடம், 'எந்த பிரச்னையும் செய்ய மாட்டோம்' என, போலீசார் முன்னதாகவே எழுதி வாங்கியுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் 2,437 ஓட்டுச்சாவடிகளில் 337 பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. அதன்படி, மதுரவாயல் - 52, அம்பத்துார் - 8, ஆலந்துார்- - 20, ஸ்ரீபெரும்புதுார் - 83, பல்லாவரம் - 89, தாம்பரம் - -85 என, ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என்பது தெரிய வந்துள்ளது.
திருவள்ளூர் தனி தொகுதியில் 3,687 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், 287 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை, ஆறு ஓட்டுச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளன.
ஆய்வு
கடந்த தேர்தலில் ஐந்து ஓட்டுச்சாவடிகளில், 90 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. இதன் உண்மை தன்மை குறித்தும், பதற்றமான ஓட்டுச்சாவடிகளையும், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர், சில நாட்களாக தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
நான்கு மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ள பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், காவல் துறை சார்பில் உதவி ஆய்வாளர், போலீஸ்காரர், மத்திய தொழிலக பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒரு பாதுகாப்பு வீரர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
தேர்தல் அதிகாரிகள் தரப்பில், மத்திய அரசு அதிகாரி ஒருவர் நுண் பார்வையாளராக பணியாற்றுவார். இதுமட்டுமல்லாமல், ஓட்டுச்சாவடியின் உள்ளே ஒரு வெப் கேமராவும், வெளியே ஒரு வெப் கேமராவும் பொருத்தப்படும். பதற்றமான ஓட்டுச்சாவடி, தேர்தலன்று நாள் முழுதும் கண்காணிப்பில் இருக்கும்.
அசம்பாவிதம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும் வகையில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், அங்கு பலப்படுத்தப்பட உள்ளது.

