ADDED : மார் 20, 2024 09:16 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஆந்திரா மாநிலம், சித்துாரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு முட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு, பூந்தமல்லி, பல்லாவரம் பகுதிகளுக்கு உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய, லாரி ஒன்று சென்னை வந்தது.
லாரியை, குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார், 32, ஓட்டினார். உடன், குடியாத்தத்தைச் சேர்ந்த குப்புசாமி, 50, சித்துார் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு, 40, லாரியில் இருந்தனர்.
நேற்று, அதிகாலை 3:00 மணிக்கு சுங்குவார்சத்திரம் அருகே வந்தபோது, மொபைல் போன் டவர் அமைக்க, இரும்பு கம்பியை ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த முட்டை லாரி மோதியது.
விபத்தில் முட்டை லாரி முன்பக்கம் சேதம்அடைந்தது. இந்த விபத்தில், லாரியில் முன் பக்கம் அமர்ந்திருந்த குப்புசாமி, ரகு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டிரைவர் நவீன்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
சுங்குவார்சத்திரம் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் விபத்தில் பலியானவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

