/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேதகிரீஸ்வரர் கோவில் பக்தர்கள் விடுதி மேம்பாடு புதுப்பிக்க ஏற்பாடு செய்யப்படும் என நிர்வாக அலுவலர் தகவல்
/
வேதகிரீஸ்வரர் கோவில் பக்தர்கள் விடுதி மேம்பாடு புதுப்பிக்க ஏற்பாடு செய்யப்படும் என நிர்வாக அலுவலர் தகவல்
வேதகிரீஸ்வரர் கோவில் பக்தர்கள் விடுதி மேம்பாடு புதுப்பிக்க ஏற்பாடு செய்யப்படும் என நிர்வாக அலுவலர் தகவல்
வேதகிரீஸ்வரர் கோவில் பக்தர்கள் விடுதி மேம்பாடு புதுப்பிக்க ஏற்பாடு செய்யப்படும் என நிர்வாக அலுவலர் தகவல்
ADDED : பிப் 19, 2024 05:05 AM

திருக்கழுக்குன்றம், : தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்திபெற்றது.
இறைவன், சுயம்பு மலைக்கொழுந்தாக, ஒரு குன்றின் உச்சியில் எழுந்தருளினார். வேத மலைக்குன்றில் வீற்றதால், வேதகிரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். உடனுறையாக, தனி சன்னிதியில் சொக்கநாயகி வீற்றுள்ளார்.
கிரிவலம்
சுவாமியின் திரிபுரசுந்தரி அம்பாள், குன்றுக்கு சற்று தென்மேற்கில் தரையில் அமைந்துள்ள பக்தவச்சலேஸ்வரர் சுவாமியுடன் வீற்றுள்ளார்.
சிவபெருமான் சாபம் காரணமாக, கழுகாக மாறிய பூஷா, விருத்தா ஆகிய முனிவர்கள், சாபத்திலிருந்து விடுபட கருதி, 20 ஆண்டுகளுக்கு முன் வரை, மலைக்குன்று கோவிலை வலம்வந்து வழிபட்டனர். 3 கி.மீ., சுற்றளவு பரப்பில் உள்ள குன்றுகளில், நோய்கள் தீர்க்கும் மூலிகை தாவரங்கள் நிறைந்துள்ளன.
இது ஒருபுறமிருக்க, குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கன்னி ராசிக்கு பெயர்ச்சியடையும் நாளில், இங்குள்ள சங்குதீர்த்தகுளத்தில், நாட்டின் அனைத்து புனித நதிகளும் ஐக்கியமாவதாக நம்பிக்கை.
அந்நாளில், குளத்தில் 'புஷ்கரமேளா' என்ற லட்சதீப விழா நடக்கும். அதே குளத்தில், மார்கண்டேய முனிவருக்காக, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சித்திரை பெருவிழா, ஆடிப்பூரம் ஆகிய உற்சவங்கள், தலா 10 நாட்கள் நடக்கின்றன.
இத்தகைய கோவிலில் கிரிவலம் செல்லும் பக்தர்கள், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றனர். குன்று கோவிலுக்கு படியேறி செல்லும் சிரமம் கருதி, 'ரோப் கார்' அமைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இச்சூழலில், நீண்டதொலைவிலிருந்து வரும் பக்தர்கள், இப்பகுதியில் தங்கி கோவிலில் வழிபட விரும்புகின்றனர். கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியோ, நீண்டகாலமாக பராமரிப்பின்றி முற்றிலும் சீரழிந்துள்ளது.
சீரழிவு
பக்தர்கள் தங்குவதற்காக, நால்வர்கோவில்பேட்டை, கிரிவல பாதை பகுதியில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், தங்கும் விடுதியை கோவில் நிர்வாகம் அமைத்தது.
தலா இரண்டு அறைகளுடன், இரண்டு கட்டடங்களை, நன்கொடையாளர் ஒருவர் கட்டி, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
பின், அறநிலையத்துறை மற்றும் அரசு பங்களிப்பில், தன்னிறைவு திட்டமாக, நான்கு அறைகளுடன் மற்றொரு கட்டடம் கட்டப்பட்டது. நாளடைவில், விடுதியை முறையாக பராமரிக்காமல், கட்டடங்கள் சீரழிந்தன. சுவர், கூரை பெயர்ந்து சிதிலமடைந்தன.
ஒரு கட்டடத்தில், தானே புயலின்போது, அருகில் இருந்த புளியமரம் விழுந்து பலமிழந்துள்ளது. குடிநீர் குழாய், மின் இணைப்பு பயன்படுத்த இயலாதவாறு உள்ளன. 50 சென்ட் பரப்பில் உள்ள விடுதி பகுதிக்கு, சுற்றுச்சுவரும் இல்லை.
திருக்கழுக்குன்றம் போலீசார், வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்த லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன. அவை துருப்பிடித்து சீரழிந்து, புதர் சூழ்ந்து உள்ளது.
இங்கு, குடிமகன்கள் மது அருந்தி, மேலும் சீரழிக்கின்றனர். அறநிலையத்துறை நிர்வாகம், பழைய கட்டடங்களை இடித்து, சுற்றுச்சுவருடன் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, ஆன்மிக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து, கோவில் நிர்வாக அலுவலர் ஒருவர் கூறியதாவது:
பக்தர்கள் தங்கும் விடுதி கட்டடங்களை பராமரித்து புதுப்பிக்கவும், சுற்றுச்சுவர் கட்டவும் முடிவெடுத்து, இத்துறையின் பொறியியல் பிரிவினர் அளவிட்டுள்ளனர். மதிப்பீடு தயாரித்து, அனுமதி கிடைத்ததும் புதுப்பித்து, பக்தர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

