/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆறு வெள்ளை வாலாட்டி பறவைகள்; பள்ளிக்கரணையில் முதல்முறையாக வலசை
/
ஆறு வெள்ளை வாலாட்டி பறவைகள்; பள்ளிக்கரணையில் முதல்முறையாக வலசை
ஆறு வெள்ளை வாலாட்டி பறவைகள்; பள்ளிக்கரணையில் முதல்முறையாக வலசை
ஆறு வெள்ளை வாலாட்டி பறவைகள்; பள்ளிக்கரணையில் முதல்முறையாக வலசை
ADDED : பிப் 26, 2024 12:41 AM

சென்னை : பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், ஒரே இடத்தில் ஆறு வெள்ளை வாலாட்டி பறவைகள் முகாமிட்டு இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
சென்னை வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை பரவியுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் வெகுவாக அதிகரித்து வருகிறது.
பறவைகள் குறித்த விபரங்களை வனத்துறையுடன் இணைந்த, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பினர் ஆவணப்படுத்தி வருகின்றனர். பள்ளிக்கரணையில் தற்போது வரை, 196 வகை பறவைகளின் வருகை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இதில், வலசை பறவைகளில் வாலாட்டி வகை பறவைகளின் வருகை, அரிதாக பார்க்கப்படுகிறது. பூமியின் வட கோளப் பகுதியில் மட்டுமே காணப்படும் இப்பறவைகள், அங்கு குளிர் அதிகரிக்கும்போது, உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக பள்ளிக்கரணை போன்ற பகுதிகளுக்கு வருகின்றன.
இது குறித்து, தி நேச்சர் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மஞ்சள் வாலாட்டி, எலுமிச்சை வாலாட்டி, காட்டு வாலாட்டி, வெள்ளை வாலாட்டி, சென்னை வாலாட்டி என, ஐந்து வகை வாலாட்டி பறவைகள் வருகின்றன. இவற்றில், சென்னை வாலாட்டி மட்டும் உள்ளூர் பறவையாக உள்ளது.
மற்ற, நான்கு வகை வாலாட்டிகளும் வலசை வரும் அரிய வகை பறவைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. கடற்கரையோர, நீர நிலைகளில் தான் இது பெரும்பாலும் காணப்படும்.
தண்ணீர் வற்றிய பகுதிகளில் காணப்படும் சிறிய பூச்சிகள், புழுக்களையே இது உணவாக உட்கொள்கிறது. கடந்த, 13 ஆண்டுகளில், ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையிலேயே வெள்ளை வாலாட்டியின் வருகை பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது பள்ளிக்கரணையில் ஆறு வெள்ளை வாலாட்டி பறவைகள் இருப்பது கணக்கெடுப்பில் உறுதியானது. புகைப்பட ஆதாரத்துடன் இதன் வருகை தற்போது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் சூழலியல் மேம்பாடு தான் இதற்கு காரணம் என தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

