/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட சிக்னல்கள் ஜி.எஸ்.டி., சாலையில் தொடரும் விபத்துகள்
/
விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட சிக்னல்கள் ஜி.எஸ்.டி., சாலையில் தொடரும் விபத்துகள்
விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட சிக்னல்கள் ஜி.எஸ்.டி., சாலையில் தொடரும் விபத்துகள்
விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட சிக்னல்கள் ஜி.எஸ்.டி., சாலையில் தொடரும் விபத்துகள்
ADDED : மார் 12, 2024 09:41 PM

மறைமலை நகர்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தேரி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், பொத்தேரி உள்ளிட்ட முக்கிய சந்திப்புகள் உள்ளன.
மூன்று ஆண்டுகளுக்கு முன், ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கத்தின் போது, அனைத்து பகுதிகளிலும் இருந்த சிக்னல்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.
தற்போது, சாலை விரிவாக்க பணிகள் நிறைவடைந்த நிலையில், எந்த பகுதியிலும் மீண்டும் சிக்னல் அமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், பொத்தேரி சந்திப்புகளை, புறநகர் பகுதிகளை சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சிக்னல் இல்லாததால், இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சிக்னல் அமைக்க வேண்டும் என, பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை சிக்னல்கள் அமைக்கப்படவில்லை.
அதனால், இந்த பகுதிகளை கடக்க பள்ளி குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்ளோர் கடுமையாக அவதிப்படுகின்றனர்.
அடிக்கடி நடைபெறும் சிறு விபத்துகளால், வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கைகலப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த பகுதிகளில் சிக்னல் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
சிக்னல் இல்லாததால், பல மணி நேரம் வெயிலில் நின்று போக்குவரத்தை சீர் செய்ய வேண்டிய நிலை உள்ளது. சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர் பகுதிகளில், கனரக வாகனங்கள் போக்குவரத்து அதிகம் என்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பொத்தேரி, மறைமலை நகர் நகராட்சி சந்திப்புகளில் சிக்னல் அமைக்க துவங்கப்பட்ட பணிகள், மந்தகதியில் நடந்து வருகின்றன.
மற்ற இடங்களில் சிக்னல் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

