/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல்வாய் -- கரிக்கிலி சாலை படுமோசம் :வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
நெல்வாய் -- கரிக்கிலி சாலை படுமோசம் :வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
நெல்வாய் -- கரிக்கிலி சாலை படுமோசம் :வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
நெல்வாய் -- கரிக்கிலி சாலை படுமோசம் :வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : டிச 23, 2025 05:44 AM

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே, நெல்வாய் - கரிக்கிலி சாலை சேதமடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து படுமோசமான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, நெல்வாய் மற்றும் மங்கலம் ஊராட்சிகள் உள்ளன.
இங்கு, மதுராந்தகம் -- உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கரிக்கிலி, சித்தாமூர், வெள்ளப்புத்துார், வேடந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும், நெல்வாய் - கரிக்கிலி சாலை உள்ளது.
இந்த தார்ச்சாலை, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
நாளடைவில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, தற்போது சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிள்களில் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
தற்போது, சாலை மிகவும் சேதமடைந்து உள்ளதால், ஆட்டோ மற்றும் அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதும் சிரமமாக உள்ளது.
புதிதாக தார்ச்சாலை அமைத்து தரக்கோரி, நெல்வாய் ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக பலமுறை, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, கலெக்டர் மற்றும் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, நெல்வாய் - கரிக்கிலி சாலையை தார்ச்சாலையாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

