/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அடுத்த 60 நாட்களில் மீன்கள் விலை உயரும் இரு மடங்கு!; இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்
/
அடுத்த 60 நாட்களில் மீன்கள் விலை உயரும் இரு மடங்கு!; இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்
அடுத்த 60 நாட்களில் மீன்கள் விலை உயரும் இரு மடங்கு!; இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்
அடுத்த 60 நாட்களில் மீன்கள் விலை உயரும் இரு மடங்கு!; இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்
ADDED : ஏப் 15, 2024 05:07 AM

சென்னை : மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், வரும் நாட்களில் காசிமேடு உள்ளிட்ட மீன்பிடி துறைமுக பகுதிகளில், மீன்களின் விலை இரு மடங்கு உயரும் என, மீனவர்கள் தெரிவித்தனர்.
கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்., 15 முதல் ஜூன் 14ம் தேதி நள்ளிரவு வரை என, 61 நாட்கள், மீன்பிடி தடைக்காலத்தை மத்தியஅரசு நடைமுறைப்படுத்துகிறது.
இந்நாட்களில், திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் துவங்கி கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மாவட்டங்களில், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள்.
இதனால், 28 குதிரை திறனுடைய இன்ஜின் வைத்து 'லாஞ்ச்' எனும் விசைப்படகு பயன்படுத்தி, ஆழ்கடலில் மீன்பிடிக்க முடியாது. கரையோர மீன்பிடி சாதாரண பைபர் படகு வைத்து மீன்களை பிடிக்கலாம்.
உற்சாகமில்லை
தடைக்காலம் துவங்குவதையடுத்து, காசிமேடில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று மீன்பிடிக்க செல்லாமல், கரைகளில் நங்கூரமிடப்பட்டன. தவிர, ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளும், கரைக்கு திரும்பி வருகின்றன.
இதனால், கடந்த வாரத்தைவிட வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன்கள் வரத்து, நேற்று அதிகமாக இருந்தது. எனினும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பலரும் சைவ உணவை கடைப்பிடித்ததால், மீன்கள்வாங்க, மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.இதன் காரணமாக மீன் விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.
கடந்த வாரத்தில் 1,300 ரூபாய் வரை விற்கப்பட்ட வஞ்சிரம் 800- ரூபாய்க்கு, நேற்று விற்கப்பட்டது. எப்போதும் விற்கப்படும் விலையை விட 250 ரூபாய் வரை விலை குறைத்து கடம்பா மீன் விற்கப்பட்டது.
வார இறுதி நாட்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காசிமேடு மார்க்கெட், வழக்கமான உற்சாகம் இன்றி காணப்பட்டது.
இன்று மீன்பிடி தடைக்காலம் துவங்குவதால், அடுத்த இரு மாதங்களுக்கு மீன்கள், நண்டு, இறால் உள்ளிட்டவற்றின் விலை இருமடங்காக உயரும் என, மீனவர்கள் தெரிவித்தனர்.
தடைக்காலத்தில் விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாததால், இந்த காலத்தில், மீனவர்கள் படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கானத்துார் ரெட்டிகுப்பம் துவங்கி, இடைக்கழிநாடு ஆலம்பரைகுப்பம் வரை, 36 மீனவ பகுதிகள் உள்ளன. 7,500க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் உள்ளனர். இத்தடைக்காலத்தில், அவர்கள் படகு, வலை பழுதுபார்ப்பு பணி மேற்கொள்ள உள்ளனர்.
இது குறித்து, அனைத்து மீனவர் சங்க தலைவர் நாஞ்சில் ரவி கூறியதாவது:
தமிழகம் முழுதும் மீன்பிடித் தடைக்காலத்தில், 80,000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மறைமுகமாக வேலைவாய்ப்பை இழப்பர். எனவே, 45 நாட்களாக இருந்த மீன்பிடித் தடைக்காலத்தில், அரசு நிவாரணமாக, மீனவர் குடும்பத்திற்கு தலா 4,500 ரூபாய் வழங்கப்பட்டது.
தற்போது 61 நாட்களாகமீன்பிடி தடைக்காலம் உள்ளதால் 5,000 ரூபாயை அரசு நிவாரணமாக வழங்கி வருகிறது.
கடந்த 2023 ஆக., 23ல் ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர் மாநாட்டில், 'மீனவர் உதவித்தொகை 5,000 ரூபாயில் இருந்து 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். எனவே, இந்த தடைக்காலத்தில், இந்த உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என நம்புகிறோம்.
படகு உரிமையாளர்களுக்கு, படகு பராமரிப்பு உதவித்தொகையை, 2 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டும்.
ஆய்வு செய்ய வேண்டும்
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், 850க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோடைக்காலத்தில் படகுகள் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமான சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே, துறைமுகத்தில் ஒரு தீயணைப்பு துறை வாகனம், எப்போதும் நிறுத்தப்பட வேண்டும்.
கர்நாடகா, மஹாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மேற்கு கடலோர பகுதிகளில், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில், மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
ஆனால், கிழக்கு கடலோர பகுதிகளான தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட, 16 கடலோர மாவட்டங்களில், ஏப்ரல், மே, ஜூன் என, கோடைக்காலத்தில் மீன் விருத்தி செய்யுமென கூறி, மீன்பிடித் தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த காலத்தில், மீன்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு இல்லை. தடைக்காலத்தை ஆய்வு செய்து அரசு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

