/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கருங்குழியில் புராதன கோட்டை மதிலை இடித்து... அட்டூழியம்;அகழியிலும் மண் கொட்டி மூடி தனிநபர் அட்டகாசம்; தொல்லியல் துறையினர் கண்டுகொள்ளாமல் அலட்சியம்

ADDED : ஆக 20, 2025 10:12 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே கருங்குழியில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கருங்கல் கோட்டை பகுதியில், மதிலை இடித்து தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால், மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், கி.பி., 17ம் நுாற்றாண்டில் முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட கருங்கல் கோட்டை உள்ளது.
சர்வே எண் 166 'பி2'-வில், 25 ஏக்கர் 16 சென்ட் பரப்பளவில் இந்த கோட்டை அமைந்துள்ளது.
பழங்காலக் கோட்டை என்பதால், சிதிலமடைந்து உள்ளது. தற்போது, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இதை, இப்பகுதி மக்கள், 'கோட்டைக்கரை' என அழைக்கின்றனர்.
இந்நிலையில், தனிநபர் ஒருவர் தன் நிலத்திற்கு பாதை அமைக்க, இந்த கருங்கல் கோட்டை மதில் மற்றும் கோட்டையில் அமைந்துள்ள பெரிய கரை, பகுதியில் சில இடங்களில் இடித்து அப்புறப்படுத்தி உள்ளார். மேலும், கோட்டையின் அகழியான பெரிய வெட்டுப்பள்ளத்தில் மண் கொட்டி மூடி, தன் நிலத்திற்கு பாதை ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்த் துறையினரிடம், இப்பகுதி மக்கள் பலமுறை மனுஅளித்தும், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த 2023ம் ஆண்டு, கருங்குழியில் உள்ள கசடு கழிவு மேலாண்மை நிலையம் அருகே, கோட்டையின் கரையை இடித்து, சிலர் பாதை அமைத்தனர்.
பொதுமக்களின் எதிர்ப்பால், இந்த ஆக்கிரமிப்பு கைவிடப்பட்டது.
தற்போது, இரண்டு ஆண்டுகள் கழித்து, இந்த பகுதியில் தனி நபர் கரையை சேதப்படுத்தி, பாதை அமைத்து உள்ளார்.
எனவே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்த இடத்தை மீட்கவும், சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, சமூக ஆர்வலர் செ.தயாளன், 42, என்பவர் கூறியதாவது:
கருங்குழி கருங்கல் கோட்டையின் கரையை இடித்து, அந்த மண்ணை அகழியில் கொட்டி மூடப்பட்டுள்ளது.
மழை நேரத்தில், கருங்குழி பேரூராட்சியில் இருந்து வெளியேறும் தண்ணீர், இந்த அகழி வழியாகச் சென்று கிளியாற்றில் கலக்கும். தற்போது மண் கொட்டி அகழியை மூடியதால், தண்ணீர் செல்வது தடைபட்டு, குடியிருப்பு பகுதியில் தேங்கி பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.தொல்லியல் துறையின் கீழ் உள்ள இந்த இடத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, மீண்டும் மறுசீரமைப்பு செய்து பாதுகாக்க வேண்டும்.
போர்க்கால அடிப்படையில் கலெக்டர் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.