/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சோழிங்கநல்லுார் - சிறுசேரி மெட்ரோ 10 நாளில் பணிகள் துவக்கம்
/
சோழிங்கநல்லுார் - சிறுசேரி மெட்ரோ 10 நாளில் பணிகள் துவக்கம்
சோழிங்கநல்லுார் - சிறுசேரி மெட்ரோ 10 நாளில் பணிகள் துவக்கம்
சோழிங்கநல்லுார் - சிறுசேரி மெட்ரோ 10 நாளில் பணிகள் துவக்கம்
ADDED : ஏப் 16, 2024 08:31 PM
சென்னை:'சோழிங்கநல்லுார் - சிறுசேரி மேம்பால மெட்ரோ ரயில் பணிக்கு புதிய ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதால், அடுத்த 10 நாட்களில் பணிகள் துவக்கப்படும்' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116 கி.மீ., தொலைவில், மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம் -- சிறுசேரி சிப்காட் வரை, 45 கி.மீ., துாரம் கொண்ட வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை, பசுமை வழிச்சாலை, சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக, சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதுபோல, பல இடங்களில் மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இதற்கிடையில், ஓ.எம்.ஆர்., சாலையில் நேரு நகர் முதல் சிறுசேரி சிப்காட் வரையில் உயர்மட்ட பாதை பணிகள், கடந்த ஆண்டு ஜூனில் துவக்கப்பட்டன. இவற்றில், சோழிங்கநல்லுார் -- சிறுசேரி வரை 10 கி.மீ., துாரம் மேம்பால பாதைக்காக, ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்து, அடுத்தகட்ட பணிக்காக, சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு வந்தன.
இருப்பினும், இந்த குறிப்பிட்ட தடத்தில் திட்டமிட்டபடி பணிகள் துவங்காததால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சோழிங்கநல்லுார் -- சிறுசேரி பகுதியில் பணியை மேற்கொள்ள, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் தாமதமின்றி பணியை துவங்காததால், அந்நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது.
தற்போது, புதிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, பணியை துவக்குவதற்கான ஆயத்த பணிகள் துவக்கப்பட்டுள்ளன. எனவே, அடுத்த 10 நாட்களில் இந்த தடத்தில் கட்டுமான பணியை துவக்க உள்ளோம்.
பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, இந்த தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி, சரியான நேரத்தில் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

