/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மத்திய அரசு கைவினை வளர்ச்சி நிதி மாமல்லையில் பயனின்றி வீணடிப்பு
/
மத்திய அரசு கைவினை வளர்ச்சி நிதி மாமல்லையில் பயனின்றி வீணடிப்பு
மத்திய அரசு கைவினை வளர்ச்சி நிதி மாமல்லையில் பயனின்றி வீணடிப்பு
மத்திய அரசு கைவினை வளர்ச்சி நிதி மாமல்லையில் பயனின்றி வீணடிப்பு
ADDED : ஏப் 18, 2024 10:55 PM

மாமல்லபுரம்:தமிழகத்தில், பாரம்பரிய கைவினைத் தொழில்கள் அழியாமல் பாதுகாக்கவும், கைவினை கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கைவினை வளர்ச்சி வாரியம், நிதியுதவி அளிக்கிறது.
தமிழக அரசின் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், அதன்கீழ் இயங்கும் பூம்புகார் நிறுவனம் வாயிலாக, கைவினை மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துகிறது.
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக முயற்சியில், சர்வதேச கற்சிற்பக்கலை நகர புவிசார் குறியீடு அங்கீகாரத்தை, மாமல்லபுரம் பூம்புகார் நிறுவனம் கடந்த 2018ல் பெற்றது. இச்சூழலில், மத்திய அமைச்சகம், கைவினை கிராமம் உள்ளிட்ட மேம்பாட்டிற்காக, 5.60 கோடி ரூபாய் ஒதுக்கியது.
கைவினை கிராமம்
மாமல்லபுரத்தில் கைவினைச் சிற்பிகள் அதிகம் உள்ள ஒரு பகுதியை, கைவினை கிராமமாக மேம்படுத்த, பூம்புகார் நிறுவனம் முதலில் முடிவெடுத்தது.
பின், கைவிடப்பட்டு, இங்கிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள காரணை ஊராட்சிப் பகுதியில், முத்துமாரியம்மன் கோவில் தெருவை தேர்வு செய்தது.
தெருவின் இருபுறமும் உள்ள தனியார் வீட்டு வளாகங்களுக்கு முன்புறம் சுற்றுச்சுவர் கட்டி, முகப்பு வாயில், கான்கிரீட் சாலை, மழைநீர் வடிகால்வாய், நுழைவாயிலில் வளைவு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. எவரும் வசிக்காத சீரழிந்த வீடுகளுக்கும் முன்புற சுற்றுச்சுவர், வாயில் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது.
அலங்கார முகப்பு
மாமல்லபுரத்தில், ஐந்து ரதங்கள் சாலை, கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில், கைவினைப் பொருட்கள் விற்பனை கடைகளுக்கு, பாரம்பரிய அலங்கார முகப்பு அமைத்து அழகுபடுத்துவதே இத்திட்டம்.
ஐந்து ரதங்கள் சாலையை ஒட்டி, கைவினைக் கடைகள் மட்டுமின்றி, மளிகை கடைகள், வீடுகள் முகப்பு உள்ளிட்டவையும் உள்ளன.
கைவினைக் கடைகளுக்கே அலங்கார முகப்பு திட்டம் என்பதால், மற்றவை தவிர்க்கப்பட்டு, அலங்கார முகப்பு முழுமையடையாத நிலையில் உள்ளது. கடற்கரை சாலை கடைகளில், இத்திட்டமே செயல்படுத்தப்படவில்லை.
சிற்பக்கலை துாண்
சர்வதேச கற்சிற்ப நகரம் என்ற புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற சிறப்பிற்காக, மாமல்லபுரம், புறவழி சந்திப்பு பகுதியில், சிற்பக்கலை துாண் அமைக்கப்பட்டது. இதை பைபரில் வடிவமைத்ததாலும், தேசிய நெடுஞ்சாலை பெரிய பாலத்தை ஒட்டி அமைத்துள்ளதாலும், சர்ச்சை ஏற்பட்டது.
இதுகுறித்து, சிற்பக் கலைஞர்கள் கூறியதாவது:
மத்திய அரசின் கைவினை வளர்ச்சி வாரியம், கைவினை கலை வளர்ச்சிக்காக நிதி ஒதுக்குகிறது. பூம்புகார் நிறுவனமோ, கலைஞர்களுக்கு பயனளிப்பதாக திட்டம் வகுப்பதில்லை. மாமல்லபுரத்திற்கான கைவினை கிராமம் திட்டத்தை, கைவினைக்கு சம்பந்தமே இல்லாத காரணையில் செயல்படுத்தினர்.
கற்சிற்பக்கலை நகர அங்கீகாரத்திற்கு, எங்கள் எதிர்ப்பையும் மீறி, பைபரில் சிற்ப துாண் அமைத்தனர். சாலை மேம்பாடால், துாணும் பாதிக்கப்படும். பூம்புகார் என்றாலே வீணடிப்பு திட்டங்களாகவே உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

