/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறநகர் வனப்பகுதியில் தீ வைப்பு
/
புறநகர் வனப்பகுதியில் தீ வைப்பு
ADDED : ஏப் 29, 2024 04:32 AM

மறைமலை நகர் : செங்கை புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காப்புக் காடுகள் உள்ளன.
இதில், மான்கள், முயல், மயில்கள், உடும்பு உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் உள்ளன. வனத்துறை சார்பில், முந்திரி, தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் மற்றும் இந்த பகுதிகளின் மண் வளத்திற்கு ஏற்ற நாவல், புங்கை உள்ளிட்ட மர வகைகள் நடப்பட்டு உள்ளன.
கடந்த ஒரு வார காலமாக, இந்த காடுகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள காய்ந்த சருகுகளில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டுச் செல்வதால், அடிக்கடி காடுகள் பற்றி எரிகின்றன.
குறிப்பாக, பரனுார், கீழக்கரணை பகுதியில், திருச்சி - தேசிய நெடுஞ்சாலை ஓரம் காய்ந்த புல்கள் தீப்பற்றி எரிந்ததால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
கடம்பூர், கொண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், காடுகள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிகின்றன.
இவ்வாறு காடுகளில் எரியும் தீயை, மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள் சென்று அணைக்கின்றனர்.
காடுகள் என்பதால் பெரும்பாலான பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் செல்ல பாதைகள் இருக்காது. இவ்வாறு தீ வைக்கும் நபர்கள் விளையாட்டாக நினைத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதுபோல காடுகளில் ஏற்படும் தீ, பெரிய சேதங்களை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. ஒரு மாதமாக கோடை வெயில் அதிகரித்து உள்ள நிலையில், இதுபோன்று எரியும் தீயை கட்டுப்படுத்துவதும் கடினம்.
எனவே, யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என, தீயணைப்பு வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மறைமலை நகரைச் சுற்றியுள்ள வனப்பகுதியில், தினமும் பலர் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.
எனவே, அந்த பகுதி முழுதும், மது பாட்டில்கள் நிறைந்து காணப்படுகிறது. இவர்களில் சிலர் தீ வைத்து விட்டுச் செல்கின்றனர்.
மேலும், தொழிற்சாலைக் கழிவுகள், உணவுப் பொருட்கள் போன்றவை தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இங்கு மது அருந்தும் நபர்களே தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
எனவே, வனக்காவலர்கள் முறையாக ரோந்து சென்று, காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

