/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொல்லியல் சின்னங்களை சுற்றிய பகுதிகள் படுமோசம்; ஆக்கிரமிப்பு, அனுமதியற்ற கட்டடங்கள் அதிகரிப்பு
/
தொல்லியல் சின்னங்களை சுற்றிய பகுதிகள் படுமோசம்; ஆக்கிரமிப்பு, அனுமதியற்ற கட்டடங்கள் அதிகரிப்பு
தொல்லியல் சின்னங்களை சுற்றிய பகுதிகள் படுமோசம்; ஆக்கிரமிப்பு, அனுமதியற்ற கட்டடங்கள் அதிகரிப்பு
தொல்லியல் சின்னங்களை சுற்றிய பகுதிகள் படுமோசம்; ஆக்கிரமிப்பு, அனுமதியற்ற கட்டடங்கள் அதிகரிப்பு
ADDED : செப் 15, 2024 11:18 PM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏழு கோவில்களை சுற்றி, ஆக்கிரமிப்புகள் அதிகமாவதோடு, அனுமதியின்றி கட்டடம் கட்டிய, 1,000 பேருக்கு மேலாக, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி உள்ளிட்ட துறையினர் நடவடிக்கை எடுக்காததால், தொல்லியல் துறையினர் புலம்புகின்றனர்.
காஞ்சிபுரம் நகரில் கைலாசநாதர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், மாதங்கீஸ்வரர் கோவில், ஜூரகேஸ்வரர் கோவில், முத்தீஸ்வரர் கோவில், ஐராவதீஸ்வரர் கோவில் மற்றும் பிறவாதீஸ்வரர் கோவில் என, ஏழு கோவில்கள், மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த ஏழு கோவில்களை சுற்றிலும், 100 மீட்டருக்குள் எந்தவித கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என, தொல்லியல் துறை சட்ட விதிகள் உள்ளன.
மேலும், 100 -- 200 மீட்டருக்குள், கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றால், தொல்லியல் துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறி, 100 மீட்டருக்கு உள்ளேயே தனி நபர்கள் ஏராளமானோர் கட்டடங்களை கட்டி வருகின்றனர்.
தனியார் மட்டுமல்லாமல், அரசு துறையினரே, தொல்லியல் துறையின் சட்டங்களை மீறி, கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், கோவிலை சுற்றியும், பார்க்கிங் வசதி இல்லாத நிலையும், ஆக்கிரமிப்புகளும் அதிகமாகிவிட்டதால், வெளியூர், வெளி நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியர், வாகனங்களை நிறுத்த கூட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
தொல்லியல் துறை சுற்றியுள்ள இடங்களை பராமரிப்பதற்கு, அந்தந்த கலெக்டர்கள், உள்ளாட்சி நிர்வாகங்களின் ஒத்துழைப்பு தேவை என, தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், நகரமைப்பு பிரிவு உள்ளிட்டோரின் ஒத்துழைப்பு இல்லை என, தொல்லியல் துறை அதிகாரிகள் கடுமையாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரத்தில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட ஏழு கோவில்கள் மட்டுமே மத்திய அரசின் பராமரிப்பில் உள்ளன. அவற்றை பராமரிப்பதில், மாநில அரசு அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதனால், கோவில்களை சுற்றி பல அடுக்கு கட்டடங்கள் கட்டப்படுவதோடு, வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு எந்தவித வசதிகளும் எதிர்காலத்தில் செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்படும் என, தொல்லியல் துறையினர் புலம்புகின்றனர்.
இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரி கூறியதாவது:
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏழு கோவில்களையும் சுற்றி, ஏராளமான கட்டடங்கள் புதிதாக கட்டப்படுகின்றன. அவற்றை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தும் கண்டுகொள்வதில்லை.
மாநகராட்சி அதிகாரிகள் எதை பற்றியும் கண்டுகொள்வதாக இல்லை. எங்கள் உயரதிகாரி, கலெக்டருக்கும் கடிதம் எழுதிவிட்டார். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
காஞ்சிபுரத்தில் உள்ள ஏழு கோவில்களை சுற்றி கட்டடம் கட்டிய, 1,000 பேருக்கு மேலாக, அனுமதியற்ற கட்டுமான பணிகள் மேற்கொண்டதாக, நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.
அனுமதியற்ற கட்டுமானங்களை நிறுத்தக்கோரி, நாங்கள் மாநகராட்சிக்கு கடிதம் வழங்கினாலும், அதன் மீது மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அனுமதியற்ற கட்டடங்களை இடிக்க, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இடிக்க முடியும்.
மாநகராட்சியில் உள்ள நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், தொல்லியல் துறை கோவிலை சுற்றியுள்ள கட்டுமானங்களை கண்டும் காணாமல் இருக்கின்றனர்.
மதங்கீஸ்வரர் கோவில் அருகே வீடு கட்டும் நபருக்கு சமீபத்தில் நாங்கள் நோட்டீஸ் கொடுத்த பின்னும், அவர் வீடு கட்டி வருகிறார்.
மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், கைலாசநாதர் கோவில் அருகே கார் பழுதுநீக்கும் கடை நடத்துபவர், கோவில் அருகே பல கார்களை நிறுத்தி வைக்கிறார். பல மாதங்களாக அந்த கார்கள் அங்கேயே நிற்கின்றன.
வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் பேருந்து, வேன் போன்றவற்றை நிறுத்த இடமில்லை. பார்க்கிங் இல்லாதது பெரும் சிரமமாக உள்ளது. இதுபற்றி கலெக்டர் தான் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிற துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு இருந்தால் தான், தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

