/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
மூன்றாவது சுற்றில் சபலென்கா: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்
/
மூன்றாவது சுற்றில் சபலென்கா: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்
மூன்றாவது சுற்றில் சபலென்கா: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்
மூன்றாவது சுற்றில் சபலென்கா: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்
ADDED : ஆக 28, 2025 10:41 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் அல்காரஸ், பெலாரசின் சபலென்கா உள்ளிட்டோர் முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் ஸ்வஜ்தா மோதினர். ஜோகோவிச் 6-7, 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு 2வது சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், இத்தாலியின் மட்டியா பெல்லுச்சி மோதினர். கடந்த ஆண்டு 2வது சுற்றோடு திரும்பிய அல்காரஸ் 6-1, 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மிகச் சுலபமாக வெற்றி பெற்றார்.
மற்ற 2வது சுற்று போட்டிகளில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், பென் ஷெல்டன், பிரிட்டனின் கேமிரான் நோரி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
சபலென்கா வெற்றி: பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷ்யாவின் போலினா குடர்மெடோவா மோதினர். இதில் சபலென்கா 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-1, 6-3 என ரஷ்யாவின் அனா பிலின்கோவாவை வீழ்த்தினார். இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினி 6-3, 6-3 என அமெரிக்காவின் இவா ஜோவிச்சை தோற்கடித்தார்.
மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் பிரிட்டனின் எம்மா ரடுகானு, அமெரிக்காவின் நவரோவா, ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பெலாரசின் விக்டோரியா அசரன்கா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
ரஷ்ய வீரருக்கு அபராதம்
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ரஷ்யாவின் டேனியல் மெத்வெடேவ் 3-6, 5-7, 7-6, 6-0, 4-6 என பிரான்சின் பெஞ்சமின் போன்சியிடம் தோல்வியடைந்தார். முதல் சுற்றோடு வெளியேறிய விரக்தியில் மெத்வெடேவ், தனது டென்னிஸ் ராக்கெட்டை ஆடுகளத்தில் இருந்த சேரின் மீது ஓங்கி அடித்து உடைத்தார். இது போட்டி விதிமுறைப்படி தவறு என்பதால் இவருக்கு, ரூ. 37.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
வார்த்தை மோதல்
பெண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் 7-5, 6-1 என, லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவை வீழ்த்தினார். வெற்றி மகிழ்ச்சியில் டவுன்சென்ட் ஆக்ரோஷமாக கத்தினார். 'சேர் அம்பயரிடம்' கைகொடுக்க சென்ற போது ஆஸ்டபென்கோ, டவுன்சென்டிடம் ஏதோ கூறினார். இதனால் இவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.