/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
அரையிறுதியில் ஜோகோவிச்-அல்காரஸ்: யு.எஸ்., ஓபனில் மோதல்
/
அரையிறுதியில் ஜோகோவிச்-அல்காரஸ்: யு.எஸ்., ஓபனில் மோதல்
அரையிறுதியில் ஜோகோவிச்-அல்காரஸ்: யு.எஸ்., ஓபனில் மோதல்
அரையிறுதியில் ஜோகோவிச்-அல்காரஸ்: யு.எஸ்., ஓபனில் மோதல்
ADDED : செப் 03, 2025 10:18 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் அல்காரஸ் மோதுகின்றனர்.
நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் மோதினர். மூன்று மணி நேரம், 24 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஜோகோவிச் 6-3, 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 53வது முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இது, அமெரிக்க வீரருக்கு எதிராக ஜோகோவிச் பெற்ற 11வது வெற்றியானது. தவிர, ஒரு சீசனில் நடந்த 4 கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு, 7வது முறையாக முன்னேறிய ஜோகோவிச் சாதனை படைத்தார். இம்மைல்கல்லை எட்டிய மூத்த வீரரானார் (38 ஆண்டு, 94 நாள்) ஜோகோவிச்.
மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் ஜிரி லெஹெக்காவை வீழ்த்தினார். அரையிறுதியில் அல்காரஸ், ஜோகோவிச் மோதுகின்றனர். ஏ.டி.பி., ஒற்றையரில் 8 முறை மோதிய போட்டியில் ஜோகோவிச் 5, அல்காரஸ் 3ல் வெற்றி பெற்றனர்.
ஜெசிகா அசத்தல்: பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவை வீழ்த்தினார். மற்றொரு காலிறுதியில் செக்குடியரசின் மார்கெடா வான்ட்ரூசோவா முழங்கால் காயத்தால் விலகியதால், உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
பாம்ப்ரி ஜோடி அபாரம்
ஆண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி 6-4, 6-4 என ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ், டிம் பியூட்ஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. கிராண்ட்ஸ்லாம் இரட்டையரில் பாம்ப்ரி, முதன்முறையாக காலிறுதிக்குள் நுழைந்தார். இதற்கு முன் 3 முறை (2014ல் ஆஸி., ஓபன், 2025ல் பிரெஞ் ஓபன், விம்பிள்டன்) 3வது சுற்று வரை சென்றிருந்தார். தவிர இவர், ஒற்றையரில் முதல் சுற்றை கடந்ததில்லை.
மாயா ஏமாற்றம்
ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மாயா ரேவதி, பிரிட்டனின் ஹன்னா குளூக்மேன் மோதினர். இதில் மாயா 7-6, 4-6, 3-6 என தோல்வியடைந்து வெளியேறினார்.
வீனஸ் தோல்வி
பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்க மூத்த வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் 45, கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் ஜோடி 1-6, 2-6 என செக்குடியரசின் சினியாகோவா, அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் ஜோடியிடம் தோல்வியடைந்தது.