ADDED : செப் 17, 2025 10:36 PM

ரடுகானு அசத்தல்
சியோல்: தென் கொரியாவில் நடக்கும் டபிள்யு.டி.ஏ., கொரிய
ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் பிரிட்டனின் எம்மா ரடுகானு, ருமேனியாவின்
ஜாக்குலின் கிறிஸ்டியன் மோதினர். இதில் ரடுகானு 6-3, 6-4 என்ற நேர் செட்
கணக்கில் வெற்றி பெற்றார்.
மயாமி பதிலடி
போர்ட் லாடர்டேல்: அமெரிக்காவில் நடக்கும் மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) தொடருக்கான லீக் போட்டியில் இன்டர் மயாமி, சியாட்டில் சவுண்டர்ஸ் அணிகள் மோதின. மெஸ்சி ஒரு கோல் அடிக்க மயாமி அணி 3-1 என வெற்றி பெற்றது. லீக்ஸ் கோப்பை பைனலில் (செப். 1) சியாட்டில் அணியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது மயாமி.
பல்கேரியா 'ஹாட்ரிக்'
பாசே: பிலிப்பைன்சில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் பல்கேரிய அணி 3-0 (25-17, 25-12, 25-12) என சிலியை வீழ்த்தியது. ஏற்கனவே ஜெர்மனி, சுலோவேனியாவை வீழ்த்திய பல்கேரியா, 'ஹாட்ரிக்' வெற்றியுடன் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறியது.
கத்தார் கலக்கல்
அம்மான்: ஜோர்டானில் நடக்கும் ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் (17 வயது) லீக் போட்டியில் கத்தார், சீனா அணிகள் மோதின. இதில் கத்தார் அணி 38-24 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் பக்ரைன் அணி 54-24 என, ஹாங்காங்கை வென்றது
எக்ஸ்டிராஸ்
* கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கவுள்ள உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் பைனலுக்கு (டிச. 4-9) இந்தியா சார்பில் மனு பாகர் (10 மீ., 'ஏர் பிஸ்டல்', 25 மீ., 'பிஸ்டல்'), சுருச்சி சிங் (10 மீ., 'ஏர் பிஸ்டல்'), ஈஷா சிங் (10 மீ., 'ஏர் பிஸ்டல்'), ருத்ராங்க் ஷ் பாட்டீல் (10 மீ., 'ஏர் ரைபிள்') உள்ளிட்ட 8 பேர் தகுதி பெற்றனர்.
* அஜித் அகார்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுவில், முன்னாள் வீரர்களான ஆர்.பி. சிங், பிரக்யான் ஓஜா இடம் பெற உள்ளனர்.
* அசாமின் கவுகாத்தியில் நடக்கவுள்ள (அக். 6-19), உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் (கலப்பு அணி) தொடரில் இந்திய அணி, 'எச்' பிரிவில் இலங்கை, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.