UPDATED : அக் 29, 2026 12:00 AM
ADDED : அக் 28, 2026 09:55 PM

புதுடில்லி: இந்திய பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ், 42. உ.பி.,யை சேர்ந்தவர். சிறு வயதில் போலியோ பாதிப்பு காரணமாக நீரஜின், இடுப்புக்கு கீழ் பகுதி செயலிழந்தது. வீல்சேரில் அமர்ந்து ஈட்டி, வட்டு, குண்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்றார். கடந்த 2018 (ஈட்டி எறிதல்), 2023 (ஈட்டி எறிதல், வட்டு எறிதல்) என இரண்டு பாரா ஆசிய விளையாட்டில், 3 தங்கம் வென்றார்.
சமீபத்தில் நடந்த ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்ட இவருக்கு, தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதனால், ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டில் பங்கேற்க முடியாமல் போனது.
இவரது தோழி ஒருவர், சோனிபட் (ஹரியானா) சென்று, ‘இனிமேல் நட்பை தொடர முடியாது,’ என நீரஜிடம் தெரிவித்தார். பின் காரில் டில்லி அழைத்துச் சென்ற நீரஜ், மவுஜ்புர் மெட்ரோ ஸ்டேஷனில், தோழியை இறக்கி விட்டார். அடுத்த சிறிது நேரத்தில் தோழியின் அலைபேசி அழைப்பை நீரஜ் எடுக்கவில்லை.
மீண்டும் ஸ்டேஷன் வந்த தோழி, காருக்கு அருகில் நீரஜ் மயங்கி கிடப்பதை பார்த்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், வரும் வழியில் நீரஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். முதல் கட்ட விசாரணையில் நீரஜ், தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
