/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
சிறந்த கால்பந்து வீரர் ரோட்ரி * 'பாலன் டி ஆர்' விருதை வென்றார்
/
சிறந்த கால்பந்து வீரர் ரோட்ரி * 'பாலன் டி ஆர்' விருதை வென்றார்
சிறந்த கால்பந்து வீரர் ரோட்ரி * 'பாலன் டி ஆர்' விருதை வென்றார்
சிறந்த கால்பந்து வீரர் ரோட்ரி * 'பாலன் டி ஆர்' விருதை வென்றார்
ADDED : அக் 29, 2024 11:21 PM

பாரிஸ்: சிறந்த கால்பந்து வீரருக்கான 'பாலன் டி ஆர்' விருதை ஸ்பெயினின் ரோட்ரி வென்றார்.
கால்பந்தில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கு பிரான்ஸ் கால்பந்து பத்திரிகை சார்பில், 1956 முதல் 'பாலன் டி ஆர்' விருது வழங்கப்படுகிறது. உலக கால்பந்து 'பிபா' தரவரிசையில் 'டாப்-100' பட்டியலில் உள்ள நாடுகளின் பத்திரிகையாளர்கள் ஓட்டுப்பதிவு தேர்வு செய்வர்.
அர்ஜென்டினாவின் மெஸ்சி அதிகபட்சம் 8 முறை, போர்ச்சுகலின் ரொனால்டோ 5 முறை இவ்விருது வென்றனர். கடந்த 2003க்குப் பின் முதன் முறையாக, விருதுக்கான பட்டியலில் மெஸ்சி, ரொனால்டோ இடம் பெறவில்லை. 2024ம் ஆண்டின் சிறந்த வீரராக ஸ்பெயினின் மத்திய கள வீரர் ரோட்ரி 28, தட்டிச் சென்றார். அடுத்த இரு இடத்தில் பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர், இங்கிலாந்தின் பெல்லிங்ஹாம் இடம் பிடித்தனர்.
சிறந்த வீராங்கனையாக ஸ்பெயினின் அய்டனா பொன்மதி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தேர்வானார்.
யூரோ கால்பந்தில் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என சாதனை படைத்த ஸ்பெயினின் லாமைன் யமால், வளர்ந்து வரும் இளம் வீரராக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த கோல் கீப்பராக அர்ஜென்டினாவின் எமிலியானோ மார்டினஸ், மீண்டும் தேர்வானார்.
வினிசியஸ் புறக்கணிப்பு
'பாலன் டி ஆர்' விருது வென்ற ரோட்ரி, மொத்தம் பங்கேற்ற 63 போட்டியில் 12 கோல் அடித்தார். கிளப் அரங்கில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக பங்கேற்கும் இவர், சக வீரர்கள் கோல் அடிக்க 14 முறை உதவினார். யூரோ கோப்பை, பிரிமியர் லீக், சூப்பர் கோப்பை, பிபா கிளப் உலக கோப்பை வெல்ல கைகொடுத்தார்.
மறுபக்கம் ரியல் மாட்ரிட் அணியின் வினிசியஸ் ஜூனியர், 49 போட்டியில் 26 கோல் (உதவி 11) அடித்தார். சாம்பியன்ஸ் லீக், லா லிகா, ஸ்பெயின் சூப்பர் கோப்பை தொடரில் கோப்பை வெல்ல உதவினார்.
ஆனால் வினிசியசிற்கு விருது இல்லை என முன்னதாக தெரியவர, ஒட்டுமொத்த ரியல் மாட்ரிட் அணியினர் விழாவை புறக்கணித்தனர்.
இனவெறி புகார்
கறுப்பினத்தை சேர்ந்தவர் வினிசியஸ் ஜூனியர். கடந்த 18 மாதத்தில் 16 முறை இவருக்கு எதிராக இனவெறி கருத்துக்கள் கூறப்பட்டன. 26 கோல் அடித்த போதும் விருது கிடைக்காதது குறித்து இவர் கூறுகையில்,'' இனவெறிக்கு எதிராக போராடுபவரை ஏற்றுக் கொள்ள கால்பந்து தயாராக இல்லை,'' என்றார்.

