/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஐ.சி.யு.,வில் ஷ்ரேயஸ் ஐயர் அனுமதி: இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி
/
ஐ.சி.யு.,வில் ஷ்ரேயஸ் ஐயர் அனுமதி: இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி
ஐ.சி.யு.,வில் ஷ்ரேயஸ் ஐயர் அனுமதி: இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி
ஐ.சி.யு.,வில் ஷ்ரேயஸ் ஐயர் அனுமதி: இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி
UPDATED : அக் 28, 2025 07:25 AM
ADDED : அக் 27, 2025 10:55 PM

சிட்னி: ஷ்ரேயஸ் ஐயர் மண்ணீரலில் ரத்தக்கசிவு ஏற்பட, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் (அக். 25) இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதில் ஹர்ஷித் ராணா வீசிய பந்தை அலெக்ஸ் கேரி துாக்கி அடிக்க, நீண்ட துாரம் பின்னோக்கி ஓடிச் சென்று அற்புதமாக பிடித்தார் இந்திய துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 30. அப்போது தடுமாறி விழுந்ததில் இடது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த இவர், களத்தை விட்டு வெளியேறினார்.
மண்ணீரல் காயம்: பின் வீரர்களுக்கான 'டிரஸ்சிங் ரூமில்' மயங்கி விழுந்திருக்கிறார் ஷ்ரேயஸ். இதய துடிப்பு, ரத்த அழுத்தம் குறைய, உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தது. உடனே சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவரது மண்ணீரலில் சிதைவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. ரத்தக்கசிவு காணப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.,) அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு கிருமி தொற்று ஏற்படாமல் தடுக்க வேண்டும். இதற்காக 2-7 நாள் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார். பாதிப்பில் இருந்து மீள 3 வாரங்கள் தேவைப்படலாம். முழுமையாக குணமடைய நீண்ட காலம் தேவைப்படும். மீண்டும் கிரிக்கெட்டுக்கு எப்போது திரும்புவார் என்பதை உறுதியாக கூற முடியாது. பயணம் செய்யும் அளவுக்கு உடற்தகுதி தேறிய பின், இந்திய திரும்புவார்.
ஷ்ரேயஸ் ஐயர் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் ஆஸ்திரேலியா செல்ல அவசர 'விசா' கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான உதவியை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செய்து வருகிறது.
நலமாக உள்ளார்: பி.சி.சி.ஐ., வெளியிட்ட செய்தியில்,'ஷ்ரேயஸ் ஐயர் 'கேட்ச்' பிடித்த சமயத்தில் இடது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் 'ஸ்கேன்' செய்த போது இவரது மண்ணீரலில் சிதைவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. தற்போது சிகிச்சையில் உள்ளார். மருத்துவ ரீதியில் நலமாக உள்ளார்.
விரைவாக குணமடைந்து வருகிறார். சிட்னி, இந்தியாவில் உள்ள மருத்துவ நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து காயத்தின் தன்மையை பி.சி.சி.ஐ., மருத்துவ குழுவினர் கண்காணிக்கின்றனர். இந்திய அணியின் மருத்துவர் ஒருவர் சிட்னியில் தங்கி, ஷ்ரேயஸ் ஐயரின் உடல்நிலையை அன்றாடம் மதிப்பீடு செய்வார்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு எப்படி
மனித உடலில் மண்ணீரல் என்பது இடது விலா எலும்புக்கு கீழே உள்ள சிறிய மென்மையான உறுப்பு. ரத்த அணுக்களை மறுசுழற்சி செய்வதோடு வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறிய அதிர்ச்சி ஏற்பட்டால் கூட சிதைந்துவிடும். கார் விபத்துகளில் 50-75 சதவீத மண்ணீரல் பாதிப்பு ஏற்படுகிறது. குத்துச்சண்டை, ஹாக்கி, கால்பந்து போன்ற உடல்ரீதியாக மோதிக் கொள்ளும் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களும் சில நேரங்களில் பாதிக்கப்படுகின்றனர்.
மண்ணீரல் சிதைவு காரணமாக வயிற்றுக்குள் ரத்தக் கசிவு ஏற்படும். இவை சிறுநீரகம், நுரையீரல் பகுதிக்கு பரவும் போது, பாதிப்பு அதிகரிக்கும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க தவறினால், உயிருக்கே ஆபத்து ஏற்படும். சிறிய அளவிலான காயம் என்றால், மூன்று மாதங்களில் குணமடையலாம். காயம் தீவிரமாக இருந்தால், மண்ணீரலை அகற்ற வேண்டியிருக்கும். ஷ்ரேயஸ் ஐயருக்கு பெரிய அளவில் பிரச்னை இல்லாததால், விரைவில் குணமடையலாம்.

