/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய வீராங்கனை பிரதிகா காயம்: உலக கோப்பையில் சிக்கல்
/
இந்திய வீராங்கனை பிரதிகா காயம்: உலக கோப்பையில் சிக்கல்
இந்திய வீராங்கனை பிரதிகா காயம்: உலக கோப்பையில் சிக்கல்
இந்திய வீராங்கனை பிரதிகா காயம்: உலக கோப்பையில் சிக்கல்
ADDED : அக் 27, 2025 10:29 PM

நவி மும்பை: காயத்தால் உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய வீராங்கனை பிரதிகா விலகினார்.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. இதன் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா (13 புள்ளி), இங்கிலாந்து (11), தென் ஆப்ரிக்கா (10), இந்தியா (7) அணிகள் முன்னேறின. அரையிறுதியில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா (அக். 29), இந்தியா - ஆஸ்திரேலியா (அக். 30) அணிகள் மோதுகின்றன.
சமீபத்தில் நவி மும்பையில் நடந்த இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதிய லீக் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இப்போட்டியில் 'பீல்டிங்' செய்த போது, இந்திய துவக்க வீராங்கனை பிரதிகா ராவல் கீழே விழுந்தார். இதில் அவரது வலது முழங்கால், கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இவரை, சகவீராங்கனைகள், உதவியாளர்கள் ஆடுகளத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர்.
காயத்தின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் உலக கோப்பை தொடரில் இருந்து பிரதிகா பாதியில் விலகினார். லீக் சுற்றில் விளையாடிய 6 இன்னிங்சில், ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 308 ரன் (சராசரி 51.33, 'ஸ்டிரைக் ரேட்' 77.77) குவித்த இவர், ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து நல்ல துவக்கம் தந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இவர் விளையாட முடியாதது, இந்திய அணிக்கு பின்னடைவாக அமையலாம். அரையிறுதியில் அமன்ஜோத் கவுர் அல்லது ஹர்லீன் தியோல் துவக்க வீராங்கனையாக களமிறக்கப்படலாம்.
பிரதிகாவுக்கு மாற்று வீராங்கனையாக ஷைபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் கூறுகையில், ''அரையிறுதியில் பிரதிகா பங்கேற்க முடியாத நிலையில், ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து ஹர்லீன் தியோல் துவக்கம் தரலாம்,'' என்றார்.

