/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மும்பை அணியை வீழ்த்தியது குஜராத்: கடைசி ஓவரில் கலக்கல் வெற்றி
/
மும்பை அணியை வீழ்த்தியது குஜராத்: கடைசி ஓவரில் கலக்கல் வெற்றி
மும்பை அணியை வீழ்த்தியது குஜராத்: கடைசி ஓவரில் கலக்கல் வெற்றி
மும்பை அணியை வீழ்த்தியது குஜராத்: கடைசி ஓவரில் கலக்கல் வெற்றி
ADDED : மார் 25, 2024 12:12 AM

ஆமதாபாத்: விறுவிறுப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி ஓவரில் கலக்கிய குஜராத் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் குஜராத், மும்பை அணிகள் மோதின. இப்போட்டியை காண 81,081 ரசிகர்கள் வந்திருந்தனர். குஜராத் அணிக்கு சகா (19) சுமாரான துவக்கம் கொடுத்தார். கேப்டன் சுப்மன் கில் (31) நம்பிக்கை தந்தார். ஓமர்ஜாய் (17) சோபிக்கவில்லை. பியுஸ் சாவ்லா பந்தில் ஒரு சிக்சர் அடித்த சாய் சுதர்சன், கோயட்சீ, பாண்ட்யா பந்தில் தலா ஒரு பவுண்டரி விரட்டினார். பும்ரா வீசிய 17வது ஓவரில் டேவிட் மில்லர் (12), சுதர்சன் (45) அவுட்டாக, குஜராத்தின் ரன் வேகம் குறைந்தது. அடுத்து வந்த ராகுல் டிவாட்யா (22) ஓரளவு கைகொடுத்தார்.
குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு இஷான் கிஷான் (0) ஏமாற்றினார். நமன் திர் (20) ஓரளவுக்கு கைகொடுத்தார். பின் இணைந்த ரோகித் சர்மா, பிரேவிஸ் ஜோடி எளிதாக ரன் சேர்த்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்த போது சாய் கிஷோர் 'சுழலில்' ரோகித் (43) சிக்கினார். பிரேவிஸ் (46), மோகித் சர்மாவிடம் சரணடைந்தார்.
டிம் டேவிட் (11) சோபிக்கவில்லை. திலக் வர்மா (25) நம்பிக்கை தந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டன. உமேஷ் யாதவ் பந்துவீசினார். முதலிரண்டு பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (11), 3வது பந்தில் அவுட்டானார். அடுத்த பந்தில் பியுஸ் சாவ்லா (0) வெளியேறினார். கடைசி 2 பந்தில் 9 ரன் தேவைப்பட, 2 ரன் மட்டும் கிடைத்தது.
மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 162 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை சாய் சுதர்சன் வென்றார்.
பாண்ட்யாவுக்கு எதிர்ப்பு
கடந்த இரண்டு சீசனில் குஜராத் அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா, இம்முறை மும்பை அணிக்கு கேப்டனானார். இதனால் நேற்று உள்ளூர் குஜராத் ரசிகர்கள், பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ரோகித் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
* மும்பை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரோகித் சர்மா, சாதாரண வீரராக களமிறங்கினார். கேப்டன் பாண்ட்யாவுடன் சகஜமாக பழகினார்.
1000 ரன்
குஜராத் வீரர் சாய் சுதர்சன், தனது 24வது ரன்னை எட்டிய போது 'டி-20' அரங்கில் 1000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இதுவரை 32 போட்டியில், 6 அரைசதம் உட்பட 1021 ரன் எடுத்துள்ளார்.
நாய் தொல்லை
ஆட்டத்தின் 15வது ஓவரின் போது நாய் ஒன்று ஆடுகளத்திற்குள் புகுந்தது. உடனடியாக வெளியேற்றப்பட்டதால் போட்டி பாதிக்கப்படவில்லை.

