/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சதம் விளாசினார் வில்லியம்சன் * வெற்றி நோக்கி நியூசிலாந்து
/
சதம் விளாசினார் வில்லியம்சன் * வெற்றி நோக்கி நியூசிலாந்து
சதம் விளாசினார் வில்லியம்சன் * வெற்றி நோக்கி நியூசிலாந்து
சதம் விளாசினார் வில்லியம்சன் * வெற்றி நோக்கி நியூசிலாந்து
ADDED : டிச 16, 2024 11:12 PM

ஹாமில்டன்: மூன்றாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற காத்திருக்கிறது. வில்லியம்சன் சதம் விளாசினார்.
நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் வென்ற இங்கிலாந்து தொடரை வென்றது.
மூன்றாவது டெஸ்ட் ஹாமில்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 347, இங்கிலாந்து 143 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 136/3 ரன் எடுத்து, 340 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
வில்லியம்சன் அபாரம்
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த வில்லியம்சன், டெஸ்டில் 33வது சதம் அடித்தார். ரச்சின் 44 ரன் எடுத்தார். வில்லியம்சன் 156 ரன் எடுத்து, சோயப் சுழலில் வீழ்ந்தார். மிட்செல் 60, சான்ட்னர் 49 ரன் எடுத்து உதவினர்.
நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 453 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பெத்தெல் 3, ஸ்டோக்ஸ் 2, சோயப் 2 விக்கெட் சாய்த்தனர்.
திணறல் துவக்கம்
பின் 658 ரன் எடுத்தால் வெற்றி என, இரண்டாவது இன்னிங்சை துவக்கியது இங்கிலாந்து. கிராலே (5) 'ஷாக்' கொடுத்தார். சவுத்தீ, டக்கெட்டை (4) போல்டாக்கினார். மூன்றாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 18/2 ரன் எடுத்து 640 ரன் பின் தங்கி இருந்தது. இன்னும் 2 நாளில் மீதமுள்ளது. இமாலய இலக்கை எட்டுவது சிரமம் என்பதால், நியூசிலாந்து வெற்றி பெற காத்திருக்கிறது.
முதல் வீரர்
ஹாமில்டன் டெஸ்டில் அசத்திய நியூசிலாந்தின் வில்லியம்சன், செடன் பார்க் மைதானத்தில் (2019ல் 200 (வங்கதேசம்), 4, 104 (இங்கிலாந்து), 2020ல் 251 (வெ.இண்டீஸ்), 2024ல் 43, 133 (தெ.ஆப்.,), தற்போது 44, 156) தொடர்ந்து 5வது சதம் விளாசினார். ஒரு மைதானத்தில் தொடர்ந்து 5 சதம் அடித்த உலகின் முதல் வீரர் ஆனார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் (மெல்போர்ன், லீட்சில் தலா 4) உட்பட 14 வீரர்கள், தொடர்ந்து 4 சதம் அடித்து இருந்தனர்.
* டெஸ்டில் நேற்று தனது 33வது சதம் விளாசினார் வில்லியம்சன் (186 இன்னிங்ஸ்). பாண்டிங் (178, ஆஸி.,), சச்சினுக்கு (181, இந்தியா), அடுத்து குறைந்த இன்னிங்சில் இந்த இலக்கை எட்டிய வீரர் ஆனார்.
* சொந்தமண்ணில், டெஸ்டில் 5000 ரன் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் ஆனார் வில்லியம்சன் (52 டெஸ்ட், 5142 ரன்).
ஸ்டோக்ஸ் காயம்
நேற்று தனது 13வது ஓவரை வீசினார் இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ். 2 பந்து மட்டும் வீசிய நிலையில் தொடையின் பின்பகுதி காயத்தால் வெளியேறினார்.

