/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தேறி வருகிறார் ஷ்ரேயஸ் ஐயர் * அறுவை சிகிச்சைக்கு பின்...
/
தேறி வருகிறார் ஷ்ரேயஸ் ஐயர் * அறுவை சிகிச்சைக்கு பின்...
தேறி வருகிறார் ஷ்ரேயஸ் ஐயர் * அறுவை சிகிச்சைக்கு பின்...
தேறி வருகிறார் ஷ்ரேயஸ் ஐயர் * அறுவை சிகிச்சைக்கு பின்...
ADDED : அக் 28, 2025 10:59 PM

சிட்னி: மண்ணீரல் காயத்தில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் தேறி வருகிறார்.
சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் (அக். 25) இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதில் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை, நீண்ட துாரம் பின்னோக்கி ஓடிச் சென்று அருமையாக பிடித்தார் இந்திய துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 30. அப்போது தடுமாறி விழுந்ததில் இடது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
அறுவை சிகிச்சை
பின் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 'ஸ்கேன்' பரிசோதனையில் இவரது மண்ணீரலில் சிதைவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. ரத்தக்கசிவு காணப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.,) அனுமதிக்கப்பட்டார். சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் 5-7 நாள் ஓய்வு அவசியம். விரைவாக தேறி வரும் ஷ்ரேயஸ், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து 'நார்மல் வார்டு'க்கு மாற்றப்பட்டார். தற்போது அலைபேசி மூலம் பேசுகிறார். சிட்னியில் உள்ள நண்பர்கள் வீட்டில் இருந்து வரும் உணவுகளை சாப்பிடுகிறார். தனது பணிகளை அவரே கவனித்து கொள்கிறார். விரைவில் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட உள்ளார்.
கடவுள் துணை
இது பற்றி இந்திய 'டி-20' அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில்,''மைதானத்துக்கு வெளியில் இருந்து பார்த்த போது ஷ்ரேயஸ் சாதாரணமாக 'கேட்ச்' பிடித்தது போலத் தான் தோன்றியது. அருகில் இருந்து பார்த்தவர்கள் தீவிர காயம் ஏற்பட்டிருக்கலாம் என கூறினர். இது துரதிருஷ்டவசமான, அரிதான சம்பவம் என டாக்டர்கள், 'பிசியோதெரபிஸ்ட்' தெரிவித்தனர். சில நேரங்களில் அரிதான சம்பவங்கள் அரிதான திறமைசாலிகளுக்கு தான் நடக்கும்.
காயம் அடைந்த முதல் நாளில் ஷ்ரேயசை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவர் வசம் அலைபேசி இல்லை என தெரிந்ததும், அணியின் 'பிசியோதெரபிஸ்ட்' கமலேஷ் ஜெயினிடம் பேசினேன். 'நலமாக இருக்கிறார்' என தெரிவித்தார். கடந்த இரு நாட்களாக ஷ்ரேயசிடம் பேசி வருகிறேன். அலைபேசி மூலம் பதில் அளிக்கிறார் என்றால், நலமாக இருக்கிறார் என்று தானே அர்த்தம்.
ஷ்ரேயஸ் ஐயர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உறுதுணையாக கடவுள் இருக்கிறார். பி.சி.சி.ஐ., நிர்வாகிகள், டாக்டர்கள் ஆதரவாக உள்ளனர். விரைவில் குணமடைந்துவிடுவார். அவரை எங்களுடன் இந்தியாவுக்கு அழைத்துச் செல்வோம்,''என்றார்.

