/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியாவை சமாளிக்குமா ஓமன்: ஆசிய கோப்பையில் மோதல்
/
இந்தியாவை சமாளிக்குமா ஓமன்: ஆசிய கோப்பையில் மோதல்
UPDATED : செப் 18, 2025 11:47 PM
ADDED : செப் 18, 2025 10:17 PM

அபுதாபி: ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா, ஓமன் அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய வீரர்கள் அசத்தினால் 'ஹாட்ரிக்' வெற்றி பெறலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் நடக்கிறது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
அபுதாபியில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் சுற்று போட்டியில் (செப். 19) இந்தியா, ஓமன் அணிகள் விளையாடுகின்றன.
குல்தீப் பலம்: முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, ஏற்கனவே 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறியது. இதில் பேட்டிங்கில் அசத்திய அபிஷேக் சர்மா (30, 31 ரன்), சுப்மன் கில் (20*, 10) ஜோடி மீண்டும் நல்ல துவக்கம் கொடுக்கலாம். 'டாப்-ஆர்டரில்' கேப்டன் சூர்யகுமார் யாதவ் (47*), திலக் வர்மா (31) பலம் சேர்க்கின்றனர். 'மிடில்-ஆர்டரில்' ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்சர் படேல் அதிரடி காட்டினால் இமாலய ஸ்கோரை பெறலாம்.
'வேகத்தில்' பும்ரா (3 விக்கெட்) நம்பிக்கை தருகிறார். இவருக்கு, ஷிவம் துபே (3), ஹர்திக் பாண்ட்யா (1) ஒத்துழைப்பு தந்தால் நல்லது. ஒருவேளை பும்ராவுக்கு 'ரெஸ்ட்' வழங்கப்பட்டால், அர்ஷ்தீப் சிங் அல்லது ஹர்ஷித் ராணா வாய்ப்பு பெறலாம்.
'சுழலில்' குல்தீப் யாதவ் (7 விக்கெட்), அக்சர் படேல் (3), வருண் சக்ரவர்த்தி (2) கூட்டணி அசத்துகிறது. இன்று இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினால், 'ஹாட்ரிக்' வெற்றியுடன் 'சூப்பர்-4' சுற்றில் பங்கேற்கலாம்.
ஆறுதல் வெற்றி: முதலிரண்டு போட்டியில் ஏமாற்றிய ஓமன் அணி, 'சூப்பர்-4' சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. பேட்டிங்கில் ஹம்மத் மிர்சா (27 ரன்), ஆர்யன் பிஷ்ட் (24), வினாயக் சுக்லா (20), கேப்டன் ஜதிந்தர் சிங் (20) ஆறுதல் தருகின்றனர். பவுலிங்கில் ஆமிர் கலீம் (3 விக்கெட்), ஷா பைசல் (3) ஓரளவு கைகொடுக்கின்றனர். ஓமன் அணியினர் எழுச்சி கண்டால் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கலாம்.
'சூப்பர்-4' சுற்றில்
இலங்கை அணி
அபுதாபியில் நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று 'பேட்' செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 169/8 ரன் எடுத்தது. நுவன் துஷாரா 4 விக்கெட் சாய்த்தார்.
அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 'பி' பிரிவில் 3 போட்டியிலும் வென்ற இலங்கை (6 புள்ளி), 2ல் வென்ற வங்கதேசம் (4) 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறின. ஆப்கானிஸ்தான் (2), ஹாங்காங் (0) அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.