ADDED : ஏப் 19, 2026 09:53 PM

சென்னை: காயம் காரணமாக ஆயுஷ் மாத்ரே, தொடரில் இருந்து விலகலாம்.
ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை அணி, ஐதராபாத்திடம் தோற்றது. இதில் சென்னை பேட்டர் ஆயுஷ் மாத்ரேவுக்கு இடது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில், 30 ரன்னில் அவுட்டானார். இவரது காயம் குணமடைய 3 வாரம் தேவைப்படலாம். இதனால், தொடரில் இருந்து விலக வாய்ப்பு உண்டு. இதுவரை 6 போட்டிகளில் 201 ரன் (ஸ்டிரைக் ரேட் 177.87) எடுத்துள்ளார். ஏற்கனவே தோனி, கலீல் அகமது காயத்தால் விளையாட முடியவில்லை. தற்போது மாத்ரேவும் விலகினால், சென்னை அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.
இது பற்றி சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறுகையில்,''மாத்ரேவின் தொடை பகுதியில் உள்ள தசையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். 'ஸ்கேன்' பரிசோதனையில் காயத்தின் தன்மை தெரிய வரும். திறமையான இளம் வீரரான இவர், நல்ல 'பார்மில்' இருந்தார். இவர் இடம் பெறாதபட்சத்தில், இன்னொரு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும்,''என்றார்.
