/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி., வெற்றி: டிராவிஸ் ஹெட் சதம்
/
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி., வெற்றி: டிராவிஸ் ஹெட் சதம்
UPDATED : நவ 22, 2025 07:58 PM
ADDED : நவ 22, 2025 03:23 PM

பெர்த்: ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் துவக்கியது. டிராவிஸ் ஹெட் சதம் விளாச, 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 123/9 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் பிரைடன் கார்ஸ் பந்தில் நாதன் லியான் (4) அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 132 ரன்னுக்கு சுருண்டது. பிரண்டன் டாக்கெட் (7) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5, கார்ஸ் 3, ஆர்ச்சர் 2 விக்கெட் கைப்பற்றினர்.
ஸ்டார்க் அசத்தல்: பின் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் ஜாக் கிராலே (0) அவுட்டானார். ஸ்காட் போலந்து 'வேகத்தில்' பென் டக்கெட் (28), ஒல்லி போப் (33), ஹாரி புரூக் (0) வெளியேறினர். தொடர்ந்து மிரட்டிய ஸ்டார்க் பந்தில் ஜோ ரூட் (8), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (2) ஆட்டமிழந்தனர்.
பிரண்டன் டாக்கெட் பந்தில் ஜேமி ஸ்மித் (15), பிரைடன் கார்ஸ் (20), ஜோப்ரா ஆர்ச்சர் (5) அவுட்டாகினர். அபாரமாக ஆடிய அட்கின்சன், 32 பந்தில் 37 ரன் (2x6, 2x4) விளாசினார். இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 164 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. மார்க் உட் (4) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் போலந்து 4, ஸ்டார்க், டாக்கெட் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
ஹெட் விளாசல்: பின் 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்டு ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்த போது பிரைடன் கார்ஸ் பந்தில் வெதரால்டு (23) அவுட்டானார். பின் இணைந்த ஹெட், மார்னஸ் லபுசேன் ஜோடி அதிவிரைவாக ரன் சேர்த்தது.
இங்கிலாந்து அணியினரின் 'பேஸ்பால்' ஆட்டத்தை கையில் எடுத்த ஹெட், 69 பந்தில் சதத்தை எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்த போது கார்ஸ் பந்தில் ஹெட் (123 ரன், 83 பந்து, 4x6, 16x4) அவுட்டானார். மறுமுனையில் அசத்திய லபுசேன், ஜோ ரூட் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். கார்ஸ் பந்தில் ஒரு ரன் எடுத்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வெற்றியை உறுதி செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் (28.2 ஓவர்) 205/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. லபுசேன் (51), ஸ்மித் (2) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் (7+3 விக்கெட்) வென்றார். இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு) வரும் டிச. 4ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது.
இரண்டு நாட்களுக்குள்...
ஆஷஸ் வரலாற்றில் 2 நாட்களுக்குள் முடிந்த 6வது போட்டியானது பெர்த் டெஸ்ட். இதற்கு முன் லார்ட்ஸ் (1888), ஓவல் (1888, 1890), மான்செஸ்டர் (1888), நாட்டிங்காம் (1921) டெஸ்ட் இப்படி முடிந்தன. தவிர, ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக 2 நாட்களுக்குள் முடிந்தது.
847 பந்து
ஆஷஸ் அரங்கில் குறைந்த பந்தில் முடிந்த 3வது போட்டியானது பெர்த் டெஸ்ட் (847 பந்து). ஏற்கனவே மான்செஸ்டர் (1888), லார்ட்ஸ் (1888) டெஸ்ட் போட்டிகள் முறையே 788, 792 பந்தில் முடிந்தன.
எட்டாவது வீரர்
டெஸ்ட் அரங்கில் ஒரு போட்டியின் இரு இன்னிங்சிலும் 'டக்-அவுட்' ஆன 8வது இங்கிலாந்து துவக்க வீரரானார் ஜாக் கிராலே.
69 பந்தில்...
டெஸ்ட் அரங்கில் 4வது இன்னிங்சில் அதிவேக சதமடித்த வீரரானார் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (69 பந்து). இதற்கு முன் இங்கிலாந்தின் கில்பர்ட் ஜெசோப் (எதிர்: ஆஸி., 1902 ஆஷஸ், இடம்: ஓவல், லண்டன்) 76 பந்தில் சதமடித்திருந்தார்.
* அதிவேக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் 6வது இடத்தை (தலா 69 பந்து) வார்னர் (ஆஸி., 2012, எதிர்: இந்தியா), சந்தர்பால் (வெ.இண்டீஸ், 2003, எதிர்: ஆஸி.,) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார் ஹெட். முதலிடத்தில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (54 பந்து, எதிர்: ஆஸி., 2016) உள்ளார்.
* ஆஷஸ் அரங்கில் அதிவேக சதம் விளாசிய 2வது வீரரானார் ஹெட். முதலிடத்தில் கில்கிறிஸ்ட் (ஆஸி., 57 பந்து, 2006, பெர்த்) உள்ளார்.

