ADDED : அக் 27, 2025 10:21 PM

கான்பெரா: ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். காயத்தால் கம்மின்ஸ் விலகினார்.
ஆஸ்திரேலியா செல்லவுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதல் டெஸ்ட் வரும் நவ. 21ல் பெர்த்தில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் பிரிஸ்பேன் (டிச. 4-8), அடிலெய்டு (டிச. 17-21), மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2026, ஜன. 4-8) நடக்கவுள்ளன.
முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இப்போட்டியில் இருந்து, முதுகு பகுதி காயத்தால் 'ரெகுலர்' கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகினார். இதனையடுத்து புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டார்.
ஏற்கனவே ஸ்மித், 40 டெஸ்ட் போட்டிக்கு (23 வெற்றி, 7 'டிரா', 10 தோல்வி) கேப்டனாக இருந்துள்ளார். தவிர, 2021 முதல் கம்மின்ஸ் விளையாடாத 6 டெஸ்ட் போட்டிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டிருந்தார். கம்மின்சிற்கு பதிலாக ஸ்காட் போலந்து தேர்வு செய்யப்படலாம்.

